Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழை மக்கள் பசியாறுன என்ன 'அம்மா'ன்னு பேரு இருக்குல்ல இழுத்து மூடு அதை! - அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சிக்கிய அம்மா உணவகம்

ஏழை மக்கள் பசியாறுன என்ன அம்மான்னு பேரு இருக்குல்ல இழுத்து மூடு அதை! - அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சிக்கிய அம்மா உணவகம்

Mohan RajBy : Mohan Raj

  |  20 April 2023 1:33 PM GMT

மூடப்படுகிறதா ஏழை மக்களின் பசியாற்றிய அம்மா உணவகம்!

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி மூலமாக மலிவு விலையில் மக்களுக்கு உணவுகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது அம்மா உணவகம். சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் திட்டம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் 2013 மார்ச் 19ஆம் தேதி சென்னை சாந்தோமில் தொடங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை ஐந்து ரூபாய்க்கும் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கும் அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும் பாரம் தூக்குபவர்கள் ஓட்டுநர்கள் என குறைந்த அளவு ஊதியம் பெறுபவர்கள் என அனைவருக்குமே பயன்பெறும் வகையில் இந்த உணவகம் செயல்பட்டு வந்தது.

மேலும் அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. இந்த உணவகத்திற்கு முதலில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்று பெயரிடப்பட்டது பின்பு அம்மா உணவகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த உணவகம் தொடங்கப்பட்டது 2013 ஆக இருந்தாலும் கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் உணவளித்த அட்சய பாத்திரமாக திகழ்ந்தது. எந்த ஒரு உணவகமும் செயல்படாத நிலையில் சாலை ஓரங்களில் தனது தினசரி கூலிக்காக மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பசியாற்றியது இந்த உணவகமே. மருத்துவப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் அம்மா உணவகமே உணவளித்தது. மேலும் இந்த உணவகம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. பின்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறி ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா என்ற மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை பின்பற்றும் வகையிலும் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்தது.

இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்த அம்மா உணவகத் திட்டத்தை அதிமுக கொண்டு வந்த காரணத்தினாலும் அதற்கு அம்மா உணவகம் என பெயரிட்ட காரணத்தினாலும், ஒவ்வொரு முறை இந்த பெயரை கூறும் பொழுது மக்களுக்கு முன்னாள் முதல்வரான ஜெ ஜெயலலிதா அம்மாவின் ஞாபகம் வருவதால் திமுக இந்த அம்மா உணவகத்தை மூடுவதற்கு பல திட்டங்களை திட்டி வருகிறது. பல்வேறு வகையில் நஷ்டக் கணக்குகளை காட்டி இந்த உணவகங்களை மூட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 10 ஆண்டுகளில் அம்மா உணவகத் திட்டத்தால் மாநகராட்சிக்கு 1200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, குறிப்பாக அம்மா உணவகத்தின் உணவு ஒரே விதமான சுவையாக இருப்பதால் சாப்பிட வரும் பொது மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாகவும் மேலும் இங்கு தயாரிக்கப்படும் இட்லி சப்பாத்தி போன்றவை தெருவோரங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளனர். அதே நேரத்தில் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக தினசரி 2000 ரூபாய் ஒரு உணவகத்தில் இருந்து வருவாய் ஈட்டப்பட வேண்டும் என்ற இலக்கையும் பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது பற்றி அம்மா உணவகத்தில் பணியாற்றிய பணியாளர்களிடம் கேட்ட பொழுது, இதற்கு முன்பு அம்மா உணவகத்தில் கிட்டத்தட்ட 12 பேர் பணியாற்றியுள்ள இடத்தில் தற்போது எட்டு பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அதே நிலையில் சம்பளமும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது அதுலயும் பணியாளர்களுக்கு மாதத்தில் ஓரிரு நாட்கள் கட்டாயமாக விடுப்பு எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் கூறுகின்றனர். மேலும் இந்த உணவகத்திற்கு வழங்கப்பட்டு வந்த அரிசி, எண்ணெய், பருப்பு மற்றும் கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. தினசரி வருவாய் 2000 முதல் 2500 வரை இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டதையும் இங்கு பணியாற்றும் பணியாளர்கள் உறுதி செய்துள்ளனர். சில நாட்களில் போதிய அளவு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படும் போது தங்கள் கை பணத்தை கொடுத்து இலக்கை அடைத்து வருவதாக கூறுகிறார்கள். மலிவு விலையில் மக்கள் உணவு சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்கள் மேலும் அவர்கள் கிட்டத்தட்ட 15 ரூபாய் வரை உணவிற்கு செலவிட தயாராக உள்ளனர் என்று கூறினார்கள்.

மேலும் குறைந்த அளவிலாக விற்பனை ஆகிறது என்று கணக்கு காட்டி அம்மா உணவகங்களை மூட நினைக்கிறார்கள், கொரோனா காலம் துவங்கி மற்ற பேரிட காலங்களிலும் பலருக்கும் உணவளிக்கும் இடமாக திகழ்ந்த அம்மா உணவகத்தை மாநகராட்சி மூட திட்டமிட்டும் வருகிறதா என்ற சந்தேகமும் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு எழுந்துள்ளது. எளிய மக்களுக்கான திட்டத்தை திமுக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் மூடு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News