"ஸ்காலர்ஷிப்லதானே சாப்புடுற..!" - தாழ்த்தப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தி பாலியல் தொல்லை செய்த பிக்பாஸ் விக்ரமன், கப்சிப் திருமாவளவன்
By : Mohan Raj
பிக் பாஸ் விக்ரமன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி சாதி அடிப்படையில் இழிவாக பேசி பணத்தை பறித்த விவகாரம் தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிருபராக இருந்த விக்ரமன், பின்னர் கலாட்டா மீடியாவில் பொலிடிக்கல் எடிட்டராக பணியாற்றினார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 2020 ஆம் ஆண்டு இணைந்த பின்னர் குறுகிய காலத்திலேயே அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது திருமாவளவன் விக்ரமனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டு போடுங்க என மக்களிடம் வாக்கு கேட்டது கூட நடந்தது. அந்த அளவிற்கு திருமாவளவன் இவரை தனது அரசியல் கொள்கையின் வெளிப்பாடாக பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கிருபா முனுசாமி எனும் பெண் வழக்கறிஞர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த கிருபா முனுசாமி என்னும் நான் 2020 ஆம் ஆண்டு லண்டன் சட்டத்துறையில் முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். நான் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றங்களிலும் பொதுத்தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன் என்பது தாங்கள் உட்பட என்பது பலரும் அறிந்ததே! தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் இலண்டனுக்கு சென்றபிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பிருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன். நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் என்னை பலமுறை 'வேசி' என்றும் பிற ஆபாச வார்த்தைகளாலும் அவமானப்படுத்தியிருக்கார். ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார்.
அதையும் மீறி அவருடைய கிரெடிட் கார்டில் ரூ.80,000/- ஏன் செலவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, "நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மன்ட்டை ஏமாற்றி ஸ்காலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற" என்று கீழ்த்தரமாக பேசினார். இது போல செட்டியார் ஜாதியில் பிறந்த அவருடைய ஜாதிய சிறப்புரிமைகளை குறிப்பிடும் போதும், என்னை ஜாதிய ரீதியில் அவர் தாக்குவதை குறிப்பிடும் போதும், அவ்வளவு தான் உன் தலித் கார்ட தூக்கிட்டு வந்துட்டியா" என்று ஒரு தலித் பெண்ணாக என்னுடைய வாழ்வனுபவத்தை கொச்சைப்படுத்தியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார் என்னை மட்டுமல்லாது தங்களுடைய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குறித்தும் என்னிடம் அவதூறாக பேசியிருக்கிறார்,
விக்ரமன் மீது தாங்கள் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிடில் அது தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் கட்சியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும்' என அந்த கடிதத்தில் கிருபா முனுசாமி தெரிவித்துள்ளார்.
இப்படி கவர்மெண்ட்ட ஏமாற்றி ஓசி ஸ்காலர்ஷிப் வாங்கி, ஓசி சோறு சாப்பிடுற என தாழ்த்தப்பட்ட பெண்ணை விக்ரமன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சாதி ரீதியான கொடுமைகள், சாதிய வன்முறை ஒடுக்கு முறைக்கு எதிரானவன் நான், எங்கு தாழ்த்தப்பட்டவர்கள் துன்புறும்போதும் அங்கு முதலில் நான் வந்து நிற்பேன் என்றெல்லாம் பேசி வந்த திருமாவளவன் தான் ஆதரித்த விக்ரமன் இதுபோன்ற ஜாதி வெறி பிடித்த மனிதராக இருக்கின்றார் என ஒரு பெண் வந்து கூறியது தெரிந்தும் ஏதும் செய்ய முடியாமல் கமுக்கமாக கொண்டு வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் பிக் பாஸ் விக்ரமனை அழைத்து இது என்ன நடந்தது என்று இதுவரை திருமாவளவன் கேட்கவும் இல்லை, மேலும் இது குறித்து திருமாவளவன் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும், செய்திகளும் வரவில்லை! ஏற்கனவே திருமாவளவன் வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் கூட்டணி கட்சி ஆனால் திமுகவினருக்கு ஆதரவாக இருந்து வருவதும், தற்பொழுது கிருபா முனுசாமி எனும் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இல்லாமல் பிக் பாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக இருந்து வருவதும் திருமாவளவன் உண்மையிலேயே சமூகநீதி போராளிதானா? இல்லை அரசியல் பிழைப்புக்காக சமூக நீதி போராளியாக வேஷம் போடுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். திருமாவளவன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்?