Kathir News
Begin typing your search above and press return to search.

கள்ளச்சாரயத்தில் பல உயிர்கள் பலி - பின்னணியில் உள்ள அரசியல் கட்சி யார்?

கள்ளச்சாரயத்தில் பல உயிர்கள் பலி - பின்னணியில் உள்ள அரசியல் கட்சி யார்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 May 2023 6:38 AM GMT

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த நிலையில்

விவகாரத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக பகீர் தகவல்கள்

கிடைத்துள்ளன.

தமிழகம் முழுவதும் மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம் கடும் அதிர்வலைகளை

ஏற்படுத்திவருகிறது. சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான

எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை

சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும்

மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. குடித்த சில

மணித்துளிகளில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ,

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள

பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ இவர்கள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர்

முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ அவர்களும் ஜிப்மர்

மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் மற்றும்

ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மண்ணாங்கட்டி

என்பவர் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். எஞ்சிய 22 பேர் தொடர்

சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் விழுப்புரம் எஸ்பி

ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க

300க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார்குப்பத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பதறிய எக்கியார் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத்

தவறிய காவல்துறையைக் கண்டித்து கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராய சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில்,

கள்ளச்சாராய வியபாரி அமரன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் பிடித்து விசாரணை

மேற்கொண்டனர். இதில், மொத்த சாராய வியாபாரியான முத்து என்பவரை போலீஸார்

தேடி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக

மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக இந்த விவகாரத்தை தெரிந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மரக்காணம் பகுதி பாஜகவினரை அழைத்து என்ன விவகாரம் என கேட்டு

தெரிந்துகொண்டு மேலும் உதவிகள் தேவை என்றால் அழைக்க வேண்டும் என

கூறினார்.அடுத்தபடியாக தனது ட்விட்டர் பதிவில், 'மரக்காணம் பகுதியில்

கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று

பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மாக் மூலம்

கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது

கள்ளச் சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற

தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து,

கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்' என பதிவிட்டார்.

இந்த நிலையில் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி

கொடுத்து வருகிறார்கள் என பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது. மரக்காணத்தில்

கள்ளச்சாரயம் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து,

மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்

மற்றும் சிவகுருநாதன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மரியா

உள்ளிட்ட 4 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் டிஜிபி

சைலேந்திரபாபு. மேலும் டிஜிபி

சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் அதிரடி கள்ளச்சாராய வேட்டை நடத்த

உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கள்ளச்சாராய

வியாபாரிகள் ரெய்டில் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மரக்காணத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த

காவலர்கள் பிரபல பத்திரிக்கையான தி ஹிந்து நாளேட்டின் நிருபர்களிடம்

கூறும்போது, "கள்ளச்சாராயத்தைக்

கட்டுப்படுத்த துறை ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதில்

தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு சிலரை பிடித்தால், அவர்களை விடுவிக்கக்

கோரி அரசியல் பிரமுகர்களே போலீசாரை வற்புறுத்துகின்றனர். அதோடு, போலீசாரை

தரக்குறைவாகவும் அவர்கள் பேசுகின்றனர். இதனால் எங்களுக்கு மரியாதையும்

இல்லை; பாதுகாப்பும் இல்லை. இதே நிலைதான் விழுப்புரம் மற்றும்

கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளன" என ஆதங்கத்தோடு பேசினார். மாநிலம்

முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்

இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருக்கிறது என்ற தகவல் பெரும்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News