கர்நாடகத்தில் நம் தமிழக முதல்வர் மேடையில் அவமதிக்கப்பட்டாரா? - நடந்தது என்ன?

கர்நாடகத்தில் முதல்வர் ஸ்டாலினை ராகு.காந்தி அவமதித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ உலா வருவது தமிழக அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தது.
பாஜக வெற்றிவாய்ப்பை இழந்ததையடுத்து தனது முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
துணை முதலமைச்சராக டி கே சிவக்குமாரும் அதே மேடையில் முறைப்படி பதவி ஏற்று கொண்டார், இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் மு க ஸ்டாலின், தேஜஸ் யாதவ், மெகபூபா முக்தி, சீதாராம் எஞ்சுரி, ராஜா, சரத் பவர், அணில் தேசாய், கமல்ஹாசன், திருமாவளவன், முஸ்லிம் லீக் பிரமுகர்கள் மற்றும் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பதவியேற்பு விழா முடிந்த கையோடு பாஜகவிற்கு மெசேஜ் சொல்லும் விதமாக ஒற்றுமையாக கரம் கொடுத்து தலைவர்கள் நிற்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலினை ராகுல் காந்தி கண்டுகொள்ளவே இல்லை! ராகுல் காந்தி அருகில் ஸ்டாலின் நின்று கொண்டிருந்த நிலையில் பிரியங்கா காந்தியை தனது அருகே அழைத்து ஸ்டாலினை மறந்து விட்டார் ராகுல் காந்தி. இதனால் தலைவர்கள் எடுத்த குழு புகைப்படத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் முகம் தெரியாத வகையில் பின்னுக்கு தள்ளப்பட்டார், இதனால் ஸ்டாலினின் முகம் மாறியது விடியோவாக வலம் வருகிறது. இவ்வளவிற்கும் 2019 தேர்தலில் முதல் முதலில் ராகுல் காந்தி பெயரை பிரதமர் வேட்பாளருக்கு பரிந்துரை செய்தது திமுக தலைவர் ஸ்டாலின்தான். காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேசிய அளவில் எவ்வளவோ செய்தும் அவரை விழா மேடையில் முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தியிருக்க வேண்டிய ராகுல் காந்தி, மகிழ்ச்சியில் மறந்து வரலாற்று பிழை செய்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் அந்த விழாவில் மக்கள் நீதி மய்ய ,தலைவரும் நடிகருமான கமலஹாசனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. இப்படி முதல்வர் ஸ்டாலினை ராகுல் காந்தி ஒதுக்க, கமலஹாசனை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்க என கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒரு வேடிக்கையாக நடந்திருக்கிறது.
மேலும் இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறும்போது, 'கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. நம் முதலமைச்சருக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அவரைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் கர்நாடக அரசு தமிழர்களைப் புறக்கணிப்பதைப் பார்க்க முடிகிறது. எங்கள் முதலமைச்சருக்கு இப்படி ஓர் அவமரியாதையை ஏற்படுத்திய கர்நாடக அரசைக் கண்டிக்கிறேன்.
அவர் திமுக தலைவராக அல்ல, எட்டுக் கோடி தமிழக மக்களின் பிரதிநிதியாகச் சென்றிருக்கிறார். முதல்வருக்கு முக்கியத்துவம் தராதது தி.மு.க-வினருக்குச் சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ, எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது" என்றார்.
இப்படி தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடவேண்டும் என கூறிவிட்டு மாநிலமான கர்நாடகத்தில் ஒரே மேடையில் ஒற்றுமை இல்லாமல் எதிர்க்கட்சிகள் நின்ற விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.