திமுக அரசைக் காவு வாங்கப்போகும் கள்ளச்சாராயம் - மௌனத்தில் முதல்வர்!
By : Mohan Raj
மரக்காணம், செங்கல்பட்டு கள்ளச்சாராயத்தை அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது தஞ்சாவூரிலும் போலி மதுபானத்தால் இரண்டு உயிர்கள் கொடூரமாக பறிபோன சம்பவம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கள்ளச்சாராயம் காட்சப்பட்டு அதை வாங்கி குடித்த அனைவருக்குமே வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தனர். இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேர் முதலில் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் அருந்திய பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 23 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த கள்ளச்சாராயம் விற்பனைக்கு பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய பலியால் கள்ளச்சாராயம் இனிமேல் எங்கும் விற்கப்படாது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் தஞ்சாவூர் டாஸ்மாக்கில் மற்றுமொரு அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ அலங்கம் பகுதியில் இருக்கும் அரசு அனுமதி பெற்ற டாஸ்மார்க்கில் தினமும் கடை திறப்பதற்கு முன்பாகவே கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.வழக்கம் போல் இந்த கள்ளச் சந்தைகளில் மது பிரியர்கள் மதுக்களை வாங்கி அருந்தியதாகவும் அப்பகுதி வட்டாரங்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நடைபெற்ற கள்ள சந்தையில் விற்கப்பட்ட மதுக்களை வாங்கி அருந்திய குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோர் டாஸ்மார்க் கடை முன்பாகவே சட்ட விரோதமாக தங்கள் வாங்கிய மதுவை அருந்தி உள்ளனர் அருந்திய அடுத்த நொடியே அவர்களது வாயில் இருந்து நுரையாக தள்ளி கீழே விழுந்துள்ளனர். இதனால் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்படி கொண்டு செல்லப்பட்ட இருவரில் குப்புசாமி என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனைக்கு சென்ற உடனே மருத்துவர்கள் கூறியுள்ளனர் அடுத்ததாக விவேக் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் அனுமதி பெற்ற டாஸ்மாக்கிலேயே போலி மதுபானம் விற்கப்பட்டு அதனால் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர். இதை விசாரணையில் கள்ள சந்தையில் விற்கப்பட்ட மதுபானங்கள் பாண்டிச்சேரியில் இருந்து வரவைக்கப்பட்டதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் குற்றம் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயம் உயிர் இழப்பிற்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சத்தை நிவாரணத் தொகையாக அறிவித்தது. ஆனால் தஞ்சாவூரில் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பிற்கு எந்த ஒரு அறிவிப்பையும் தன் தரப்பில் இருந்து தமிழக அரசு முன் வைக்காமல் இருப்பது தஞ்சாவூர் மக்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி வருகிறது.
இப்படி தொடர்ச்சியாக கள்ளச்சார விவகாரத்தால் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆளும் அரசிற்கு எதிரான கருத்துக்களை சிந்திக்கும் வகையில் ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரத்திலாவது கள்ளச்சாராயத்தை காட்சி அதனை குடித்து 23 பேர் உயிரிழந்தனர். ஆனால் தஞ்சாவூரில் அரசின் முழு அனுமதி பெற்று நடத்தப்பட்டு கொண்டிருந்த டாஸ்மாக்கில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது பானத்தால் இருவர் உயிரிழந்த விவகாரத்தால் அப்பகுதி மக்கள் கொந்தளித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரியையே அறையில் வைத்து பூட்டி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.