Kathir News
Begin typing your search above and press return to search.

இடதுசாரிகள் பக்கம் சாயும் ராகுல்- பலமா? பலவீனமா?

இடதுசாரிகள் பக்கம் சாயும் ராகுல்- பலமா? பலவீனமா?
X

ShivaBy : Shiva

  |  6 March 2021 4:41 PM IST

வரவிருக்கும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி என இரு முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தனித்தனியே போட்டியிட்டால் நான்கு முனைப்போட்டியாக மாறி அது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மும்முனை போட்டி ஏற்படும். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தவறான நிர்வாகம் மற்றும் பல தசாப்தங்களாக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வரும் இவர்களால் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான நிலையே ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை சிதறடித்த ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் இஸ்லாமிய மதகுரு அப்பாஸ் சித்திக் புதிதாக உருவாக்கிய இந்திய மதச்சார்பற்ற முன்னணியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பட்சத்தில் அதுவும் திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவாக மாறி பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் 29 சதவிகித முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் மாநிலத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. ஆனால் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்துள்ளது, ராகுல் காந்தி இடதுசாரிகளின் பக்கம் திரும்பியது மட்டுமல்லாமல் அவர் இஸ்லாமியர்களின் வாக்காளர்களை நம்பி களத்தில் இறங்கியுள்ளார் என்பதையும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி தன்னை ஒரு மென்மையான இந்துத்துவா கொள்கையாளராக காட்டிக் கொண்டார். ஆனால் அது தேர்தலின் முடிவில் எந்த பலனையும் காங்கிரஸிற்கு அளிக்கவில்லை. இதனால் 2019 ஆம் ஆண்டு தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்ட ராகுல் ஒரு தொகுதியில் நின்றால் வெற்றி பெற முடியாது என்று நினைத்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

அதற்கு முக்கிய காரணம் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட ஸ்மிரிதி இராணியை தோற்கடிக்க முடியாது என்ற காரணமும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை அதிகம் என்பது தான். அவர் எண்ணியது போலவே அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதே எண்ண ஓட்டத்தில் தான் தற்போது காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் மற்றும் ஐ.எஸ்.எப் உடன் கூட்டணி அமைத்து மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறது.

இதேபோல் அசாமிலும் ராகுல் காந்தி 2021ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அடிப்படைவாத மதகுரு பத்ருதீன் அஜ்மலின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) மீது நம்பிக்கை வைத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வகையில் ஜம்மு காஷ்மீரை அடுத்து சிறுபான்மையினர் அதிகம் உள்ள மூன்று இந்திய மாநிலங்களான கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி சிறுபான்மையினரை திடீர் என்று அரவணைப்பது 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாட்டில் 15 சதவீதம் மட்டுமே இருக்கும் முஸ்லிம் வாக்காளர்களை அரவணைப்பதன் மூலம் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் வாக்குகளை ராகுல்காந்தி தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கும் நிலையில், இந்த பின்னணியில் மேற்கு வங்கத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News