கோவில் அருகே மீன் சந்தை! தடுத்து நிறுத்திய பா.ஜ.க!
By : Shiva
திருச்சி மாவட்டத்தில் கோவில் அருகே மீன் சந்தை அமைக்கும் பணியினை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்தை பாஜக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் கீழ புலிவார்டு ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு பூலோகநாத சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. வாஸ்து நிவர்த்தி தலமான இந்த கோவிலுக்கு தினமும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த கோவிலுக்கு அருகே மாநகராட்சி நிர்வாகம் சார்பாக மீன் சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயை போல் பரவியது. அப்பகுதியில் உள்ள சிவனடியார்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் அருகே மீன் சந்தை அமைக்க கூடாது என்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் புகார் மனுவையும் அவர்கள் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் கோவில் திருவிழாவின் போது சுவாமி புறப்பாடு நடக்கும் போது கோவில் அருகே மீன் சந்தை இருந்தால் அதனால் ஏற்படும் துர்நாற்றம் அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் கோவில் அருகே மீன் சந்தை அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் வியாபாரிகளும் பாதிக்கப்படாத நிலையில் வேறொரு இடத்தில் அவர்களுக்கு மீன் சந்தை அமைத்து தர வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.