ஈழத்தமிழர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டு தற்போது பொய் வாக்குறுதி அளிக்கும் தி.மு.க!
By : Shiva
'இலங்கையில் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் இனப்படுகொலை குறித்த சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தும்' என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பல்வேறு போர்க் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது இலங்கை தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். இதற்கு அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு அவர்கள் எந்த ஒரு அழுத்தம் கொடுக்காமல் பதவி சுகத்திற்காக வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது தி.மு.க தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் என்ற பெயரில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்துவிட்டு உலகிலேயே மிக நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருந்தது போல் அறிக்கை விடுத்ததை உலகத் தமிழர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
ஆனால் 12 ஆண்டுகள் ஓடிவிட்டது மக்கள் அனைத்தையும் மறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் தற்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அறிக்கை விடுத்து இருப்பதை மக்கள் அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் புதிதாக அமையவிருக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தில் தமிழர்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைத்திடும் வகையில் சட்டங்களை கொண்டுவர இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரசிடம் தி.மு.க இந்த கோரிக்கையை வைத்தது உண்டா என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருன்றனர். அதேபோல் இலங்கையிடம் கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.கவே தற்போது கச்சத்தீவை மீட்போம் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ஏற்கனவே தமிழகத்திலும் மத்தியிலும் நடைமுறையில் இருக்கும் திட்டங்களாகவே உள்ளது என்று ஏற்கனவே பல்வேறு தரப்பு மக்கள் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.