இந்து விரோத தி.மு.க.வின் வெற்று வாக்குறுதி- உருவாகிறதா இந்து வாக்கு வங்கி?
By : Shiva
'இந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரிகிறது' என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்பு பேசிய போது அமைதியாக சிரித்து ரசித்துக்கொண்டிருந்த ஸ்டாலின் தற்போது இந்துக்களின் வாக்குகளை பெற்றே எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தோடு தனது தேர்தல் வாக்குறுதிகளில் இந்துக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பிற மதத்தினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கூட இந்து மதத்தைப் பழித்துப் பேசும் வழக்கம் கொண்டவர்கள் திமுகவினர் என்பது அனைவரும் அறிந்ததே. ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவிப்பார், கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து தெரிவிப்பார் ஆனால் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததில்லை. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து முதலில் செய்தி வெளியிட்ட ஸ்டாலின் பிறகு அதனை தனது வலைதள பக்கத்திலிருந்து நீக்கிய சம்பவமும் அரங்கேறியது கடந்த காலத்தில் நாம் அறிந்த ஒன்றே.
அதே போல் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த தி.மு.க. ஐ.டி பிரிவைச் சேர்ந்த சிலர் முருகப்பெருமானை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத ஸ்டாலின் தற்போது இந்துக்களுக்கு ஆதரவு அளிப்பதாக காட்டிக் கொள்வதற்காக ஆயிரம் கோடி ரூபாயில் கோவில்கள் புனரமைக்கப்படும் என்று வெற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்து திருமண சடங்குகளின் போது சொல்லப்படும் மந்திரங்களுக்கு மிகவும் கேவலமான அர்த்தங்கள் உள்ளது என்று திருமண மேடையில் பேசிய ஸ்டாலின் தற்போது அனைத்து ஜாதியினரும் கோவில் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் 205 பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். அதே போல் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக இந்துக்களுக்கு ₹25,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பதும் ஸ்டாலினின் வெற்று அறிக்கையாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தில் தி.மு.க. இந்து எதிர்ப்பு கட்சியாக அனைவர் மனதிலும் பதிந்து விட்ட நிலையில் தற்போது தேர்தலை மனதில் வைத்து அந்த பிம்பத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற வெற்று அறிக்கைகளை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி பயணமான வேல் யாத்திரை மூலம் இந்துக்கள் ஒன்றிணைந்து திமுகவை வெற்றி பெற விடாமல் செய்து விடுவார்கள் என்ற பயத்திலும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு உள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.