Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களின் காதில் பூ சுற்றும் தி.மு.க.- இந்து விரோதப் பேச்சுக்களின் தொகுப்பு!

இந்துக்களின் காதில் பூ சுற்றும் தி.மு.க.- இந்து விரோதப் பேச்சுக்களின் தொகுப்பு!

ShivaBy : Shiva

  |  17 March 2021 1:15 AM GMT


இது தேர்தல் சமயம். பல்வேறு பிரிவினரின் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். அது போல தான் திமுகவும் செய்திருக்கிறது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கையில் இந்து கோவில்களை புனரமைக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் இந்துக்கள் புனித யாத்திரை செல்வதற்கு நிதி வழங்கப்படும் என்றும் திமுக கூறியது பலத்த விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.


திமுக புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. அரசு கோவில்களை புனரமைக்க நிதி ஒதுக்கும் என்றால் ஏற்கனவே தமிழக அரசில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு வரும் உண்டியல் நிதியிலிருந்து நிதி ஒதுக்கும் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பிற மத வழிபாட்டு தலங்களுக்கு தமிழக அரசின் கஜானாவில் இருந்தே நிதி ஒதுக்கப்படும் என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் இந்துக்கள் கைலாச பர்வதத்திற்கு புனித யாத்திரை செல்வதற்கு ஏற்கனவே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திமுக இந்த உதவித்தொகையை அதிகரிப்பதோடு பிற மதத்தினரின் புனித யாத்திரைக்கான உதவித்தொகையை அதிகரிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

உண்மை இவ்வாறாக இருந்தாலும் இந்த வாக்குறுதிகளை காட்டி திமுக இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்றும் "நாங்கள் இந்துக்களுக்கு விரோதமானவர்கள் இல்லை" என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததை சுட்டிக்காட்டியும் திமுக ஆதரவாளர்கள் இந்துக்களை முட்டாளாக்க முயன்று வருகின்றனர். கருணாநிதி அண்ணாதுரை பெரியார் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் தான் இந்துக்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தினார்கள் என்று நினைத்து விடக் கூடாது. மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் ஸ்டாலின் மூன்று அடுத்த தலைமுறை தலைவர்கள் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல.

இந்த பின்னணியில் கடந்த காலத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்துக் கடவுள்களை எப்படி எல்லாம் இழிவு செய்தார்கள் என்பதை நினைவு கூர்வது அவசியம். இந்த பணியை கையில் எடுத்துக் கொண்ட யாரோ ஒரு புண்ணியவான் இதுவரை திமுக, அதன் தாய் கழகம் திக மற்றும் விசிக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் எவ்வாறெல்லாம் இந்து மதத்தையும் கடவுள்களையும் இழிவுபடுத்தினர் என்பதை ஒரு வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் துவக்கத்தில் விசிக பிரமுகரும் இந்த தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுபவருமான ஆளூர் ஷாநவாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பக்கத்தில் இருந்து கொண்டு "ராமனின் செருப்பு 14 ஆண்டு காலம் ஆட்சி செய்தது என்று நம்பிக் கொண்டு இருப்பவர்களையும் மாட்டு சாணம் தான் சக்திமிக்க ஆயுதம் என்று நம்பி கொண்டிருப்பவர்களையும் அதே செருப்பை சாணியில் முக்கி அடிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார். இதை தி.மு.க.வின் முக்கிய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் ரசித்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது.

திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி ஒரு மேடையில், "பெரியார் ராமரை செருப்பால் அடிப்பதற்கு முன்னர் திமுக 138 தொகுதிகளை தன் கையில் வைத்திருந்தது. அடித்ததற்கு பின்னர் 183 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது" என்றும் இதனால் "ராமரை செருப்பால் அடித்தால் தமிழகத்தில் அதிக வாக்குகள் கிடைக்கும்" என்று பேசியுள்ளார். அதேபோல் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுப.வீரபாண்டியன் இந்துக்கள் கோவிலுக்கு செல்வார்கள் ஆனால் இறுதியில் தி.மு.க.விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று திமிராகப் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்துக்களை பற்றியும் இந்து கடவுள்களை பற்றியும் பேசாமல் இருந்த மேடையே கிடையாது. அவ்வாறு ஒரு மேடையில் பேசிய போது ஐயப்ப பக்தர்களையும் அவர் விட்டுவைக்காமல் ஐயப்பன் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவர் என்று பேசியுள்ளார். மகாவிஷ்ணுவின் பெண் அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் புணர்ந்து உடனே பிறந்த குழந்தை தான் ஐயப்பன் என்று சனாதனம் கூறுவதாக அவர் சாஸ்திரங்களையும் புராணங்களையும் நக்கலடித்து இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார்.

திமுகவின் இந்து விரோத போக்கில் மிகவும் முக்கிய பங்காற்றியவர் தி.மு.க. தலைவரின் தங்கை கனிமொழி. அண்ணன் ஒரு மேடையில் வேல் வாங்கி விட்டார் என்ற ஆசையில் தங்கைக்கு வேல் கொடுக்க முயன்ற உடன்பிறப்புகளிடம் வேல் வாங்க மறுத்த கனிமொழி "கோவில்களில் இருக்கும் உண்டியலுக்கு எதற்காக பூட்டு போடுகிறார்கள்? கடவுள் உண்மையாக இருந்தால் அவர் அவரிடம் இருக்கும் உண்டியலை பாதுகாத்துக் கொள்ள மாட்டாரா?" என்று திக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

இவை அனைத்திற்கும் வீடியோ ஆதாரம் இருப்பதால் இதனைத் தாங்கள் பேசவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் மறுக்க முடியாது. தற்போது இந்து வாக்குகளை குறிவைத்து கோவில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் அறிக்கை விடுத்து இருப்பது அனைவரது காதிலும் பூ சுற்றுவது போல இருக்கின்றது என்றே சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News