எங்க குடும்பமே தி.மு.க எனும் சேற்றில் விழுந்து விட்டது - கடும் விரக்தியில் தி.மு.க சீனியர் குடும்ப உறுப்பினர் அ.தி.மு.க-வில் ஐக்கியம்!

முன்னாள் சபாநாயகர் வின் மூத்த மகனும் திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சேடபட்டி இரா. முத்தையா 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். 2000 வரை அதிமுகவில் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார்.
தற்போது சேடப்பட்டி முத்தையாவின் மகனும், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான மணிமாறன் திருமங்கலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார், போட்டியிடுகிறார். இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா மூத்த மகனும், திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், ஜெயலலிதா கோயிலில் வைத்து அமைச்சர் ஆர்பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''எங்கள் குடும்பத்தை வாழ வைத்தது மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்கள்தான் எங்களுக்கு அடையாளத்தை தந்தவர்கள். ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு எனது தந்தையும், சகோதரரும் திமுக எனும் சேற்றில் விழுந்து விட்டார்கள்.
அதிலிருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். திமுகவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்காத காரணத்தினால் தற்போது அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன். திருமங்கலம் தொகுதியில் நானும் எனது குடும்பத்தினரும் ஆர்.பி. உதயகுமார் வெற்றிக்காக ஆதரவு திரட்டுவோம் '' என்றார்.