சிறுபான்மையினரை மதிக்காத காங்கிரஸ் கட்சி-மீனவர் அணி தலைவர் சுயேச்சையாக போட்டி!
By : Shiva
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியில் மீனவர் அணித் தலைவர் பதவி வகித்த சபின் தற்போது சுயேச்சையாக போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த ஆண்டு காங்கிரஸ் மீனவர் அணி தலைவராஇ இருந்த சபின் என்பவர் மீனவர் சமுதாய மக்களின் உரிமை பறிக்கப்படுவது பற்றி கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைத்த போது சக கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டார். நகர்புற ஊராட்சி தேர்தல் தொடர்பாக கலந்துரையாட குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் மீனவர் அணி தலைவர் சபின் "உள்ளாட்சித் தேர்தலில் சில வேட்பாளர்களை மட்டும் ஆதரித்து தலைவர்கள் பேசினார்கள். மற்ற வேட்பாளர்களை தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை" என்று விமர்சித்திருந்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் பாதியிலேயே பேச்சை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தோடு விடாமல் கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற போது சபின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அவர் மீது நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது இவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மற்றொரு பக்கம் "காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த மீனவர் சமுதாயம், கிறிஸ்தவ சமுதாயம் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு என அனைவருக்கும் சமமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளில், உள்ளாட்சிகளில், மாவட்ட பஞ்சாயத்தில், மாநகராட்சி தலைவர் பதவியில், வார்டு உறுப்பினர்கள் என எந்த பதவியிலும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பொறுப்பில் இல்லை" என்று மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இதைத் தட்டி கேட்டால் காங்கிரசில் மீனவர் அணித் தலைவராக இருந்த சபின் கதைதான் என்று அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சியில் இதுபோல் பொறுப்பில் இருக்கும் சிறுபான்மையினரைக் கூட சரமாரியாக தாக்கும் காங்கிரஸ் கட்சியினர் தான் நாட்டின் மதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் காக்கப் போகும் ஒரே கட்சி என்பது போல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.