தி.மு.கவில் உள்ள அனைவருமே ஸ்டாலின்தான் - தோல்வி பயத்தில் உளறிய ஸ்டாலின்!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் அ.தி.மு.க'விற்கு சாதகமாக மாறி வருகிறது. இதனை அ.தி.மு.க'வை விட தி.மு.க நன்கு உணர்ந்துள்ளது. இந்த பயத்தின் வெளிப்பாடாக நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், பல்லடம் தொகுதியில் போட்டியிடும் முத்து ரத்தினம் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்பொழுது பேசிய அவர், "முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார். நேற்றைக்கு ஒரு கூட்டத்தில் தி.மு.க'வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று பழனிசாமி பேசியிருக்கிறார். சபாஷ்…அவரை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒத்துக்கொள்கின்ற ஒரே பெரிய மனுஷன் பழனிசாமி தான். அது பாராட்டுக்குரியது தான்.
மிஸ்டர் பழனிச்சாமி அவர்களே… தி.மு.க.வை அழிக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்களே… தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்தான் அழிந்து போயிருக்கிறானே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைக்கவும் முடியாது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்கவே முடியாது.
தி.மு.க. என்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, சென்னை முதல் குமரி வரை இருக்கும் லட்சோப லட்சம் ஸ்டாலின்களைக் கொண்ட இயக்கம்தான் இந்த தி.மு.க. என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல, இந்த இயக்கத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புகளும் கலைஞருடைய பிள்ளைகள்தான் என்பதை மறந்து விடக்கூடாது" என தோல்வி பயத்தில் பேசினார்.
இதுவரை அ.தி.மு.க ஆட்சியின் செயல்களை விமர்சித்து வந்த ஸ்டாலின் திடீரென தி.மு.க இயக்கத்தை பற்றி தொண்டர்களுக்கு மத்தியில் பேசியது தோல்வி பயத்தின் வெளிப்பாடே என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.