Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியலில் யார் துக்கடா? கமல்ஹாசனா? வானதியா?

அரசியலில் யார் துக்கடா? கமல்ஹாசனா? வானதியா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2021 12:30 PM IST

அரசியல்வாதிகளின் வார்த்தைகள் தான் அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. அது மக்கள் முன் ஆகட்டும், ஊடக முன்னிலையாகட்டும், அறிக்கையாகட்டும், பொதுக்கூட்டம் ஆகட்டும், ஏன் தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட விளம்பரங்களை வெளியிடும் காலகட்டத்தில் கேமரா முன் நடிக்கும் போது "ரெடி, ஸ்டார்ட், கேமரா,ஆக் ஷன்" என கூறி எழுதியதை படிப்பதாகட்டும். அரசியல்வாதிகளின் வார்த்தைகளே எண்ணங்களாகின்றன.

அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் எண்ணங்களை, தரத்தை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன. ஒரு சிலர் அச்சில் ஏற்ற இயலாத வார்த்தைகளை சர்வ சாதாரணமாகவும், ஒரு சிலர் அதிமேதாவி தனமாகவும் வார்த்தைகளை உதிக்கின்றனர். அச்சில் ஏற்ற இயலாத வார்த்தைகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலடி தருவர்.

ஆனால் அதிமேதாவித்தனமான வார்த்தைகளுக்கு உடனடியான பதிலடி தரவேண்டியது நம் கடமை அந்ந வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க'வின் தேசிய மகளிரணி தலைவர் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். அவருன் போட்டியாக சினிமா நடிகர் திரு.கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இருவரும் களத்தில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி'க்கு பதில் தரும் வகையில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி எங்கள் தலைவரை பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்

அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் மாண்புமிகு. நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் மாண்புமிகு. நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பா.ஜ.க அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக "வானதி சீனிவாசன் போன்ற துக்கடா" தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும்" என மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் "துக்கடா"வாம் யார் கூறுவது என பார்த்தால் "பரமகுடி'காரர் கமல்ஹாசன்". என்ன ஒரு விமர்சனம் யார் 'துக்கடா' என்பதை விவாதங்கள் அல்ல இருவரின் வாழ்க்கை பாதையை வைத்தே ஒப்பிட்டு பார்க்கலாம்.

66 வயதான கமல்ஹாசனுக்கு நேரடியாக களத்தில் இறங்கும் முதல் தேர்தல் இது. கடந்த இரண்டு ஆண்டுகள் வரை திரைப்படங்களும், விளம்பரங்களும், 'பிக் பாஸ்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே கமல்ஹாசனின் வாழ்க்கை பாதை ஆனால் வானதி ஸ்ரீனீவாசன் முழுநேர அரசியலுக்கு வரும்பொழுது வயது 23 மேலும் 29'வயதில் ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளர் பதவியை எட்டிபிடித்தார்.

வெற்றியோ தோல்வியோ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளார், ஆனால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் இல்லாத களமாக பார்த்து பகுமானமாக தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசனுக்கு இது முதல் தேர்தல்.

தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் பிறந்த ஊர் அல்லது இறங்கி சேவை செய்த ஊராகதான் இருக்கும். அந்த வகையில் 'துக்கடா' வானதி ஸ்ரீனிவாசன் அவர் பிறந்த கோவை மண்ணில் போட்டியிடுகிறார். ஆனால் 'உலக நாயகன்' கமல்ஹாசனோ பிறந்த பரமகுடியிலும் போட்டியிடவில்லை, தற்பொழுது வசிக்கும் மயிலாப்பூரிலும் போட்டியிடவில்லை! "துக்கடா" என மற்றவர்களை அழைப்பவர்க்கும் தோல்வி பயம் இருக்க தானே செய்யும்?

2011 விஸ்வரூபம் பட பிரச்சினைக்காக கமல்ஹாசன் தனியார் அமைப்புகளிடமும், அரசிடம் பேசி தனது படைப்பை வெளியிட முடியாமல் "நாட்டை விட்டே போகிறேன்" என புலம்பும் வேளையில் முடிவுகளை பற்றி கவலை கொள்ளாமல் 2011 ஆண்டு வானதி ஸ்ரீனிவாசன் தன் முதல் தேர்தலை எதிர்கொண்டார்.

"ஆளவந்தான்" என்னை அழிக்க வந்தான் என கலைப்புலி தாணு அவர்களே கூறும் அளவிற்கு இந்த 'நம்மவர்' கமல்ஹாசனால் பாதிக்கப்பட தயாரிப்பாளர்கள் ஏராளம், ஆனால் வானதி ஸ்ரீனிவாசனால் பாதிக்கப்பட்டவர்கள் என ஒருவரை காட்ட இயலுமா?

பெண்களின் முன்னேற்றத்திற்காக தாமரை சக்தி என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார் வானதி ஸ்ரீனிவாசன், ஆனால் இன்று மனைவிகளில் ஒருவரிடமும் கூட கமல்ஹாசன் சேர்ந்து வாழவில்லை.

இதோ இந்த தேர்தல் களேபரங்கள் முடிந்த பிறகும் வெற்றியோ, தோல்வியோ தன் அரசியல் வழக்கத்தை விட வேகமாக எடுத்து முன்னேறுவார் "துக்கடா" வானதி ஸ்ரீனிவாசன். ஆனால் இப்பொழுதே பகுதிநேர அரசியல்வாதியான கமல்ஹாசன் பங்கேற்கும் "பிக் பாஸ் சீசன் 5"ற்கான பிரபலங்கள் தேர்வு நடக்கிறது உலகநாயகனின் வருகையை எதிர்பார்த்து.

துக்கடா எனும் வார்த்தை யாருக்கு பொருந்தும்?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News