இந்து மதத்தை இழிவு படுத்தியவர்களுக்கு எங்கள் ஓட்டு இல்லை - சைவ சமய மடாதிபதிகள் அறிவிப்பு!
By : Shiva
இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தியும் அவதூறாக பேசி வரும் அரசியல் கட்சிகளுக்கு இந்துக்களின் வாக்குகள் கிடையாது என்று சைவ சமய மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்
அண்மையில் சைவசமய மடாதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதன் தலைவர் பேசுகையில் "இந்துக்கள் சகித்து கொள்ள முடியாத அளவிற்கு சில அரசியல் கட்சிகள் இந்து மத நம்பிக்கைகளையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். அவ்வாறு பேசி வரும் அரசியல் கட்சிகளுக்கு எங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்து கடவுள்களை மதிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே இந்துக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்து மத நம்பிக்கை, சிலை வழிபாடு மற்றும் இந்துக்களின் அடையாளங்களை தொடர்ந்து பழிக்கும் அரசியல் கட்சிகளை நாம் அடியோடு அகற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் மற்றும் திருஞானசம்பந்தரை இழிவுபடுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த சிலர் பேசியுள்ளனர். மேலும் கொங்கு மண்டலத்தில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் அவர்கள் தொடர்ந்து பேசி வருவதற்கு அவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
"பல நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி கவசம் இழிவு படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கும், தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்தவர்களுக்கு மட்டும் தான் இந்துக்கள் வாக்களிக்க வேண்டும்" என்று சைவ சமய மடாதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.