தி.மு.க. கையில் எடுத்துள்ள பொய் பிரச்சாரங்கள்- இது டிஜிட்டல் இந்தியா மக்களை ஏமாற்ற முடியாது!
By : Shiva
தி.மு.க. ஆட்சியின் இருண்ட காலம் பற்றி மக்கள் என்றும் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். அந்த அளவிற்கு 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் மக்கள் தாங்க முடியாத இன்னல்களை சந்தித்து உள்ளனர். அதனாலேயே கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் தி.மு.க.வை மக்கள் அமர வைக்கவில்லை. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் தங்களது திருட்டுக்களை தொடங்கிவிட வேண்டும் என்று பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதில் அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் பொய்.
தி.மு.க.வின் இந்த பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஸ்டாலின் பேசுவது போல் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமான தேர்தல் இல்லை. தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று பேசுகிறார். உண்மையில் ஸ்டாலின் பாசிச என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து தான் அவ்வாறு பேசினாரா என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசை எதிர்த்து செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் இழைக்கப்பட்டது என்பதை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். தி இந்து பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதையும் தினகரன் அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதையும் அதில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியானதையும் மறக்க முடியுமா?
'நமது தமிழ் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வடநாட்டு காரர்களுக்கு தூக்கி கொடுக்கிறார்கள்' என்று தனது வீடியோ விளம்பரத்தில் ஸ்டாலின் தெரிவிப்பார். ஸ்டாலின் கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டில் தான் இருந்தாரா அல்லது ராகுல்காந்தி போல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டாரா என்று தெரியவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அனைத்து அறிவிப்புகளிலும் வெளியிடப்பட்டிருப்பது அவருக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. வாட்ஸ்அப்களில் வரும் போலியான ஃபார்வர்டு மெசேஜ்களை நம்பி அவ்வாறு தெரிவித்துவிட்டார் போல.
மத்திய அரசு வேலைவாய்ப்பில் அனைத்து மாநிலத்து மாணவர்களும் விண்ணப்பித்து தேர்வு எழுதி எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியில் சேரலாம் என்று இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருக்கும் வங்கி, வருமானவரித்துறை போன்ற நிறுவனங்களில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் சேர்ந்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். நமது தமிழக மாணவர்களும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளேடுகளில் பொய்யான விளம்பரங்களை அ.தி.மு.க. கொடுத்து விட்டது என்று கதறும் ஸ்டாலின் தனது வீடியோ விளம்பரத்தில் முழுவதுமே பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளார் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளதை ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள்.