ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் - அதிர்ச்சியில் தி.மு.க கூட்டணி கட்சியினர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து வரும் மே இரண்டாம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனோ தொற்றால் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்ற வேட்பாளர் போட்டியிட்டார். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.