எதிர்கட்சியா இருக்கும் போது ரூ.1 கோடி நிவாரணம் குடுக்க சொன்னீங்களே? இப்ப நீங்க குடுங்க! - ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி!

கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆளும் தி.மு.க அரசை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனோ'வால் உயிரிழந்த அரசு களப்பணியாளர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆளும் தி.மு.க வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். கடந்த ஆட்சியிலும் கூட இதே ரூபாய் 25 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏதோ அதிகப்படுத்தி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கிறது
கடந்த வருடம் ஏப்ரல் 15ஆம் தேதி தி.மு.க உள்ளிட்ட 11 கட்சிகளின் கூட்டணியினர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது.
மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் 6'ம் தேதி அன்று அ.தி.மு.க அரசு, கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்தது. அப்போது கடுமையாக எதிர்த்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஏப்ரல் 2020 அன்று அறிவித்திருந்தபடி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சம் வரை குறைத்துக் கொடுப்பதை கடுமையாக ஆட்சேபித்து ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பதிவு செய்தது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்' - என்ற திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல. ஆகவே, உடனடியாக முதல் அமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.