தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு, டீசல் கையிருப்பு இல்லை - சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள்
By : Mohan Raj
ஒருபுறம் பொருளாதார நெருக்கடி மறுபுறம் 10 மணிநேரம் மின்வெட்டு என இலங்கை மக்கள் இதுவரை அனுபவிக்காத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
நம் நாட்டின் அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு மோசமானதால் அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது, இதனால் அத்தியாவசிய பொருள்கள் கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் இலங்கையில் நாடு முழுவதும் தினம்தோறும் குறைந்தபட்சம் 10 மணி நேர மின்வெட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏழு மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டு 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
இலங்கை அனல் மின் நிலைய உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அதன் உற்பத்தியில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் தலைவரை ஜனக ரத்நாயக்கா தெரிவித்தார். இதற்கிடையில் இலங்கையில் டீசல் வரத்து இல்லாததால் நேற்றும், இன்றும் டீசல் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வந்து காத்திருக்க வேண்டாம் என சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு இதுவரை சுமார் 7,500 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.