"எங்க ஸ்கூலுக்கு பக்கத்துல டாஸ்மாக் கடை வேண்டாம் சார்" - கெஞ்சும் 1000 மாணவர்கள்! கண்டுகொள்ளுமா தி.மு.க அரசு?

"எங்கள் பள்ளிக்கு பக்கத்துல டாஸ்மாக் கடை வேண்டாம்" என கெஞ்சாத குறையாக பள்ளியில் படிக்கும் 1000 மாணவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ முத்தையாப்பிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கும் இப்பள்ளி கொரோனோ இடைவெளிக்கு பிறகு தற்பொழுது தான் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் தி.மு.க அரசு கம்பம் ஏரியாவில் தேவிபாலா தியேட்டர் சாலையில் உள்ள பள்ளியை ஒட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதனை கேள்விப்பட்ட ஸ்ரீ முத்தையாப்பிள்ளை நினைவு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிககும் அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடை பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வந்தால் மாணவர்களின் படிப்பு, செல்லும் வழி ஆகியவை பாதிக்கப்படும் என பெற்றோர்களும், டாஸ்மாக் கடை படிக்கும் பள்ளி அருகில் வரும் பட்சத்தில் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்படும் என மாணவிகளும் பயந்த வண்ணமே உள்ளனர். இந்த நிலையில் இந்த கடை திறக்க கூடாது என நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சி தலைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியை சாரதா கடிதம் எழுதியுள்ளார்.
இது மட்டுமின்றி அங்கு படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எங்கள் பள்ளி அருகில் டாஸ்மாக் கடை வேண்டாமே எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் " எங்கள் பள்ளிக்கு அருகில் மதுபாட கடை வேண்டாம் ப்ளீஸ்" என கெஞ்சாத குறையாக எழுதியுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா தி.மு.க அரசு?