நலத் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை வரவேற்க வேண்டியது நமது கடமை! - அந்தர் பல்டி அடித்த கனிமொழி!
தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நாம் எதிர்க்கக் கூடாது, அவரை வரவேற்பதுதான் சிறந்தது என்று திமுக எம்.பி. கனிமொழி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
By : Thangavelu
தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நாம் எதிர்க்கக் கூடாது, அவரை வரவேற்பதுதான் சிறந்தது என்று திமுக எம்.பி. கனிமொழி அந்தர் பல்டி அடித்துள்ளார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 12ம் தேதி தமிழகம் வர உள்ளார். அது மட்டுமின்றி அவர் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பங்கேற்கிறார். இதனால் விழா ஏற்பாடுகளை பாஜகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், துவக்கி வைக்கவும் வருகை புரிந்தார். அப்போது வேண்டும் என்று திமுகவினர் மற்றும் மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சேர்ந்து கருப்பு கொடி காட்டுவது மற்றும் பலூன்களை பறக்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே பிரதமர் மோடி தமிழகம் வரும்போது திமுக வரவேற்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது, மாநிலத்திற்கு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். அவரை வரவேற்பது நமது கடமை, அவரை எதிர்க்கக்கூடாது என்றார். மக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைக்கும்போது எதிர்ப்பது சரியில்லை என்றார். இவர் பேசியிருப்பது நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் பிரதமர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது திமுகவினர் எதிர்த்து விட்டு தற்போது திமுக ஆட்சியில் மட்டும் எப்படி மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி வைக்க வருகின்றார் என்ற கதைகளை கூறி வருவது சரியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Source: Asianet Tamil