Kathir News
Begin typing your search above and press return to search.

"இப்படியா மக்கள் பயப்படுற மாதிரி ஆட்சி நடத்துவீங்க?" - ஸ்டாலினிடம் கேட்கும் ஓ.பி.எஸ்!

இப்படியா மக்கள் பயப்படுற மாதிரி ஆட்சி நடத்துவீங்க? - ஸ்டாலினிடம் கேட்கும் ஓ.பி.எஸ்!

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jan 2022 11:34 AM GMT

"இப்படியா மக்கள் பயப்படுற மாதிரி ஆட்சி நடத்துவீங்க?" என முதல்வர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் பரிசில் பல்லி கிடந்ததை எதிர்த்து கேள்வி கேட்டவரின் மீது தி.மு.க அரசு வழக்கு பதிந்தது, அந்த மன உளைச்சல் காரணமாக வழக்கு பதியப்பட்டவரின் மகன் தற்கொலை செய்யப்பட்டு இறந்தார். தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பண்டகசாலை நியாய விலைக் கடையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இறந்து கிடந்ததை திரு. நந்தன் என்பவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததன் விளைவாக, இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உலகத்தில் உண்மை பேசுவதை விட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கினங்க உண்மையை எடுத்துரைத்து இருக்கிறார் திரு. நந்தன் அவர்கள். இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் பிற பகுதிகளில் இதுபோன்று நிகழக்கூடாது என்பதற்காகத்தானே தவிர அரசின் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல. தி.மு.க. அரசின் மீது குறை கூறுகிறார் என்றால் அதில் உள்ள உண்மை தன்மையை ஆய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதுதான் ஓர் அரசின் ஆக்கப்பூர்வமான செயல். அதைவிடுத்து, குறையை சுட்டிக்காட்டுபவர் மீதே நடவடிக்கை எடுப்பது என்பது உண்மையை மூடி மறைக்க முற்படும் செயல் ஆகும்.

திரு. நந்தன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி என்பதை மீறி அவர் இந்த நாட்டின் குடிமகன். 'இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு மீது குற்றம் சாட்டுவதற்கும், அரசின் திட்டங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் உரிமை உண்டு.

ஆனால், இவர் மீது ஜாமீனில் வர இயலாத அளவுக்கு ஒரு வழக்கினை திருத்தணி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

உண்மையைச் சொன்ன தனது தந்தை மீது ஜாமீனில் வர இயலாத வழக்குகளை தி.மு.க. அரசு பதவி செய்துள்ளதே என்கிற மன உளைச்சலில், விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை அழைத்து துன்புறுத்துவார்களோ என்ற அச்சத்தில், திரு. நந்தன் அவர்களின் மகன் திரு. பாபு என்கிற குப்புசாமி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து, " முதலில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


திரு. குப்புசாமி அவர்களின் உயிரிழப்புக்கு ஆளும் தி.மு.க. அரசே காரணம் எனக் குற்றம் சாட்டுவதோடு, தி.மு.க. அரசின் அடக்குமுறைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பயப்படும்படியாக ஆட்சி நடத்தும் இந்த அரசு வீழும் நாள் வெகுதூரத்தில் இல்லை" என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Source - OPS Tweet

Next Story
கதிர் தொகுப்பு
Trending News