Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் வேண்டும் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் - களத்தில் இறங்கிய அண்ணாமலை

தமிழகத்தில் வேண்டும் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் - களத்தில் இறங்கிய அண்ணாமலை

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2022 6:26 AM GMT

அரியலூர் மாவட்டத்தில் 17 வயது மாணவியை கிருஸ்துவ மதமாற்றத்திற்கு தூண்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளம்பியுள்ளது, இந்த விவகாரம் தொடர்பாக கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் வேண்டி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியை கட்டாயமாக மதம் மாறச்சொல்லி துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளம்பியுள்ளது. இந்த கொடுமை மேலும் நடைபெறாமல் இருக்க தமிழகத்தில் தேவை கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணமலை குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்த அறிக்கையில் கூறியதாவது, "அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயின் மகள். இவர் அரியலூர் மாவட்டம் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல், மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து உள்ளார். பள்ளியில் மிக நன்றாகப் படிக்கும் இந்த மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, சிஸ்டர் சகாயமேரி என்பவர், இவரை மதம் மாறச் சொல்லி, தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். மாணவியின் பெற்றோர்களையும் சந்தித்து அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியும் மாணவியின் பெற்றோரும் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், மாணவியை படிக்க விடாது விடுதியின் கணக்கு வழக்குகளையும் மற்ற இதர வேலைகளையும் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துள்ளார்.

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், மனம் உடைந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொள்ள பள்ளியில் இருந்த விஷத் தன்மைகொண்ட திரவத்தை அருந்தியுள்ளார். தொடர்ந்து வாந்தியும் உடல்நலக்கேடும் ஏற்பட்டதால் மாணவியை பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்து விட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.

பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்திற்கு முன் மாணவி பேசிய வீடியோ பதிவிற்கு சம்மந்தமில்லாமல் இருக்கிறது. அதில் கட்டாய மத மாற்றம் செய்வதற்காக மாணவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தைப்பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

மரணத்திற்கு முன் மாணவி கொடுத்த வீடியோ பதிவு மிகத் தெளிவாக சிஸ்டர் சகாயமேரி மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் மத மாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதை உறுதி செய்கிறது, ஆகவே அரசு நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்" என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விகாரம் குறித்து இதுவரை ஆளும் தி.மு.க அரசு எந்தவித கருத்தும் கூறாமல் அமைதியாக உள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - TN BJP Tweet

Next Story
கதிர் தொகுப்பு
Trending News