"மூத்த தலைவர்கள் எங்க ஆலோசனை சொல்றாங்க? ஆட்சியைப் பிடிக்கிறதுல நிக்குறாங்க? - கே.எஸ்.அழகிரி வேதனை

By : Mohan Raj
'ஆட்சியைப் பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறவில்லை' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வருத்தமாக தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்ற லெனின் பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "அகில இந்திய அளவில் மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரசுக்கு இரட்டை தலைமை வேண்டும் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது, அந்த தலைவர்கள் எல்லாம் அதிகாரத்திற்கு வருவதை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன ஆட்சியைப் பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி அவர்கள் ஆலோசனை சொல்வது இல்லை" என்றார் வேதனையுடன்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் திருப்பூரில் வெளியிட்டபோது திரையரங்கில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உறுதிமொழியை ஏற்று இருக்கிறார்கள். இதனை போலீசார் எப்படி அனுமதித்தனர்? என கேள்வி எழுப்பினார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் உட்பட சில இடங்களை காங்கிரஸ் கிடைக்க வேண்டிய பதவி கிடைக்கவில்லை இது தடர்பாக தி.மு.க தலைமையிடம் பேசி வருகிறோம் எனக் கூறினார்.
