'ஆப்ரேஷன் தாமரை' - பா.ஜ.க.வில் இணையும் தி.மு.க எம்.எல்.ஏ, 'ஆரம்பிக்கலாமா' மோடில் கமலாலயம்
By : Thangavelu
தி.மு.க. எம்.எல்.ஏ., அய்யப்பனை அக்கட்சி திடீரென்று சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைவது பற்றி ஆலோசனை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வத்திற்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட சில பதவிகளை தி.மு.க.வினர் கைப்பற்றினர். இது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் புகார் கூறியிருந்தார். இதன் பின்னர் வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை உடனடியாக விட்டுக்கொடுக்கும்படியும் தலைமை அறிவுறுத்தியது. ஆனால் அய்யப்பன் ஆதரவாளர்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
மேலும், கடலூர் மேயராக தனது ஆதரவாளரை கொண்டு வருவதற்காக கவுன்சிலர்களை கடத்தி தனது கட்டுப்பாட்டில் அய்யப்பன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை முறியடித்து அமைச்சர் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரை மேயராக தேர்வு செய்தார்.
இது குறித்த புகார் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பன்னீர்செல்வம், அய்யப்பனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய வைத்தார். மறுபடியும் அவரை தி.மு.க.வில் இணைப்பதற்கான முயற்சியை அக்கட்சி மேலிடம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அய்யப்பன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் இணைவதற்கான கருத்துக்களை முன்வைத்தனர். இருந்தாலும் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக அய்யப்பன் இணைந்தால் தனது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்படும் என்று உணர்ந்த அவர், பா.ஜ.க. அனுதாபியாக இருந்து கொண்டு சட்டசபையில் அதிருப்தி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக தொடரலாம் எனவும் அவர்களின் ஆதரவாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.
மேலும், பா.ஜ.க.வில் இணைவதற்கான தகவலை அறிந்த தி.மு.க. தலைமை அய்யப்பனிடம் மன்னிப்பு கடிதம் கேட்டுள்ளது. மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்கிறோம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முதன் முதலாக தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் பா.ஜ.க.வில் இணைவது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar