"இவ்ளோ நாளா இருக்கவிட்டதே பெருசு போவியா" - கொளத்தூரில் 150 குடும்பங்களின் வீட்டை இடித்து மக்களை துரத்திய தி.மு.க அரசு !

"இத்தனைநாள் உங்களை இங்க குடியிருக்கவிட்டதே பெரிய விஷயம்" என கொளத்தூரில் வீடுகளை இடித்துவிட்டு மக்களிடம் தி.மு.க அமைச்சர் ஒருவர் அதிகார தோரணையில் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அவ்வை நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் 60'க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 150'க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து இத்தனை ஆண்டுகளாக சொத்துவரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், ,குடிநீர் வரி ஆகியவற்றை வசூலித்துவிட்டு தற்பொழுது இவர்களுக்கு வாழ மாற்று இடம் தராமலும், வீட்டை காலி செய்ய அவகாசம் தராமலும் இவர்களின் வீட்டை இடித்து தள்ளியுள்ளது தி.மு.க அரசு.
கடந்த டிசம்பர் மாதம் 10'ம் தேதி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம், "ஜி.கே.எம். காலனி மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளை இணைக்கும் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு" கடிதம் கொடுத்துள்ளனர்.
7 நாட்கள் அவகாசம் என டிசம்பர் 10'ம் தேதி கடிதம் கொடுத்துவிட்டு அடுத்த நாளான 11'ம் தேதியே வீட்டை இடிக்க துவங்கியுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவும், பகலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மக்களை கதறல் சத்தம் தி.மு.க அரசுக்கு கேட்கவில்லை, இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள தி.மு.க அமைச்சரிடம் சென்று முறையிட்டதில், "இத்தனைநாள் உங்கள அரசாங்கம் இருக்கவிட்டதே பெரிய விஷயம். இடத்தை காலி பண்ணிடுங்கனு" முகத்தில் அடித்தாற்போல் சொல்லிட்டாராம். பாவம் பிழைக்கவும், வேறு வீடு தேடி செல்ல கையில் பணமும் இல்லாமல் முதல்வர் தொகுதி கொளத்தூர் பகுதி மக்கள் வெயில், பனியில் பட்டினி கிடக்கின்றனர்.