பிரியங்கா காந்தி ஓவியத்தை 2 கோடிக்கு வாங்க என்னை கட்டாயப்படுத்தினார்கள் - யெஸ் வங்கி இணை நிறுவனர் பரபரப்பு தகவல்!
By : Thangavelu
பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எப்.உசேன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் பரபரப்பான வாக்கு மூலம் அளித்துள்ளார். யெஸ் வங்கியின் இணை நிறுவனராக இருந்த ராணா கபூர் நிதி மோசடி செய்ததாக கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ராணா கபூர் உள்ளிட்டோர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எப்.உசேன் ஓவியத்தை வாங்குவதற்கு தன்னை கட்டாயப்படுத்தினர் என்று கூறியுள்ளார். இது பற்றி அமலாக்கத்துறைக்கு ராணா கபூர் வாக்கு மூலமாக தெரிவித்துள்ளார்.
இந்த ஓவியத்தை வாங்கினால்தான் பத்ம பூஷன் விருது கிடைக்கும். மற்றும் பல்வேறு சலுகைகளை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு வழங்கும் என கூறினார். இந்த ஓவியத்தை நான் ரூ.2 கோடி கொடுத்து வாங்கிவிட்டேன். இதனை வாங்குவதற்காக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டை அமலாக்கத்துறையிடம் ராணா கபூர் வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை செய்யும்போது பல்வேறு தகவல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Source: Daily Thanthi
Image Courtesy: TFIPOST