Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியானது இந்தியன் 2 டிரெய்லர்...நிஜம் வேறு உருட்டு வேறு என காட்டிய கமல்! இணையத்தில் வெடிக்கும் விமர்சனங்கள்!

SushmithaBy : Sushmitha

  |  28 Jun 2024 1:21 PM GMT

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது தற்போது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் அரசியலுக்கு வரும் போது ஒரு பேச்சு வந்த பிறகு ஒரு பேச்சு என்பதே அதிக அளவில் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக தற்போது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல நின்று கொண்டு திண்டாடி வருபவர் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன். இவர் கடந்த 2018 அரசியலுக்கு வருவதற்கு நேரம் வந்துவிட்டது என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு, பிறகு மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிவித்தார்.

இதைவிட, தான் ஒரு கட்சி தொடங்கியுள்ளேன் என்பதை வெளிக்காட்டும் வகையில் இவர் கொடுத்த விளம்பரங்களும் ரியாக்ஷன்களுமே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் 2018ல் அரசியல் கட்சியை தொடங்கிய பொழுது கமலஹாசன் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளையும், ஊழல்களையும், சமூக அவலங்களையும் தட்டிக் கேட்க உள்ளதாகவும்; குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான ஒரு கட்சியாக செயல்படும் என்ற வகையில் விளம்பரங்களை வெளிக்காட்டி இருந்தார். இதனை அடுத்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் 142 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் கமலஹாசனும் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும் மக்கள் நீதி மய்யம் அந்த தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இதனை அடுத்து விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து நல்ல வெற்றி கண்டார். அந்த திரைப்படத்தில் ஊழலுக்கு எதிராகவும் குறிப்பாக நார்கோட்டிஸ் எனப்படுகின்ற போதை பொருளை எதிர்க்கும் கும்பலின் தலைவனாக அதில் நடித்திருந்தார். ஆனால் தற்பொழுது போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இருந்த திமுகவுடனே கூட்டணி அமைத்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கிறது என்ற செய்தி வெளியான பொழுது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது. அதிலும் பெரும்பாலான திரை பிரபலங்களே கமலஹாசனின் இந்த முடிவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திலும் கமலஹாசனே நடித்துள்ளார். மேலும் இந்த ட்ரெய்லரில், நாட்டில் படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை, அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள், திருடர்களும் தப்பு செய்பவர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஊழல் திழைத்து விட்டது, வன்முறைகள் மற்றும் கலவரங்களே நாட்டில் நடக்கிறது! இவை அனைத்தையும் தடுப்பதற்கும், தட்டிக் கேட்பதற்கும் ஒரு ஹண்டிங் டாக் ஒன்று வரவேண்டும் என அநியாயங்களை துணிச்சலாக எதிர்க்கும் இளைஞர்களை வழிநடத்தி நேதாஜி வழியில் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்துவது போன்று கமலஹாசன் இந்த ட்ரெய்லரில் தோன்றியுள்ளார். மேலும் இந்த படமும் ஊழல் மற்றும் அநியாயத்திற்கு எதிராக கேள்வி கேட்பது போன்ற கதை சூழலை கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் "படத்தில் காட்டப்படும் மற்றும் எடுக்கப்படும் காட்சிகள் ஒன்று, நிஜத்தில் நீங்கள் செய்யும் அரசியலை வேறயாக இருக்கிறதே" என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது ஒரு அரசாங்கம் மதுபானத்தை விற்பனை செய்வது மட்டுமின்றி மறைமுகமாக கள்ளச்சாராய விற்பனையும் அரசு அதிகாரிகளின் உதவியோடு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமின்றி மணல் கொள்ளை விவகாரத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 4,700 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன் வைத்ததோடு, இதில் திமுக அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என டி.ஜி.பிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதைத் தவிர ஏராளமான குற்றச்சாட்டுகளை தற்போது ஆட்சியில் இருக்கும் அரசின் மீது வைத்துக்கொண்டே செல்லலாம் அப்படிப்பட்ட ஒரு கட்சி இடமே நீங்கள் கூட்டணி வைத்துக்கொண்டு, இந்த பிரச்சனைகள் எதையுமே பார்க்காத வகையிலும், காதில் கேட்காத வகையிலும் அதே திமுக ஆட்சி குறித்த படத்திலே நீங்கள் நடித்துள்ளீர்கள். படத்தில் சொல்வது ஒன்று நிஜத்தில் செய்வது ஒன்றாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News