இனி காங்கிரஸ் கட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை - 3வது கூட்டணிக்கு அடித்தளமிடும் சரத்பவார்!

இனி காங்கிரஸ் கட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை என உணர்ந்த சரத்பவார், பிரஷாந்த் கிஷோர் கூட்டணி 2024 தேர்தலுக்காக மூன்றாவது கூட்டணியை அமைக்கும் பணியை துவங்கியுள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை மும்பைக்கு வரவழைத்து அவருடன் சரத்பவார் மூன்று மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இரண்டாவது முறையாக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பின் பின்னனியில் வரும் 2024 தேர்தலுக்காக 15 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
முதல் கட்டமாக திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரித் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. சிவசேனா ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. எனவே அந்த கட்சியை கூட்டணிக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருக்காது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், புதிய கூட்டணியில் சேருவதில் சிக்கல் இருக்காது. சமாஜ்வாடி கட்சியையும் இக்கூட்டணியில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஒடிசாவில் முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் எந்த கூட்டணியிலும் இல்லாமல் இருக்கிறார். அவரை எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இழுத்துக்கொள்ள முடியும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் இக்கூட்டணிக்கு வரக்கூடும் என்று தெரிகிறது. தமிழகத்தில் தி.மு.க'வையும் எளிதில் தங்களது பக்கம் இழுத்துவிட முடியும் என்று சரத்பவார் கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும் அதற்கு தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் அடிப்படையாக திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Soure - ஜூனியர் விகடன்.