கைதானதும் 3 முறை போனில் தொடர்பு கொண்ட பார்த்தா சட்டர்ஜியை, கண்டுக்கொள்ளாத மம்தா!
By : Thangavelu
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, கைது செய்யப்பட்டதை தெரிவிக்க முதலமைச்சர் மம்தாவை நள்ளிரவு நேரத்தில் 3 முறை போனில் தொடர்பு கொண்டபோது பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் மம்தா பானர்ஜி அவரது அழைப்பை எடுக்கவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வந்தது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இதில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதிலும் மாநில தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, மாநில கல்வித்துறை அமைச்சராக இருக்கின்றபோது இந்த மோசடி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
மேலும், அமலாக்கத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்துதான் அர்பிதா முகர்ஜி மற்றும் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை 3 முறை போனில் தொடர்பு கொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். அந்த தகவல் 'அரெஸ்ட் மெமோ'வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தா சட்டர்ஜி அதிகாலை 1:55 மணிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாலை 2:33 மற்றும் 3:37 மணிக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதனை எடுக்காத பட்சத்தில் மீண்டும் காலை 9.35 மணிக்கும் மம்தா பானர்ஜியை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அனைத்து அழைப்புகளையும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் ஒருவர் முதலமைச்சரிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எடுக்காமல் நிராகரித்துள்ள சம்பவம் அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar