விழுப்புரத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - எட்டிகூட பார்க்காத ஆளும் தி.மு.க, 4 கிராம மக்கள் தவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவஸ்த்தை படுகின்றனர். அங்கு ஆளும் தி.மு.க'வில் இருந்து யாரும் எட்டி பார்க்காததால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியிருக்கின்றன. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நதியான தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து துவங்கியதுமே எல்லிஸ் சத்திரம் தடுப்பணை சேதமடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. நேற்றைய தினம் தளவானூர் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஆர்ப்பரித்தது. இந்த நிலையில், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் (கோரையாறு) குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 4 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவசர உதவிக்கும் சுமார் 20 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இங்கு கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை பெய்து வருவதால், இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதனால், வழக்கம் போல, நேற்று இந்த தரைப்பாலம் உடைந்துவிட்டது. இந்த நிலையில் டி.ஆர்.ஓ., தாசில்தார்., பி.டி.ஓ போன்றோர் வந்து பார்த்துவிட்டு சென்றதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.