Kathir News
Begin typing your search above and press return to search.

ஃபார்முலா 4 கார் பந்தயம்.. நிதி கேட்டு மிரட்டும் தி.மு.க.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

ஃபார்முலா 4 கார் பந்தயம்.. நிதி கேட்டு மிரட்டும் தி.மு.க.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 July 2024 1:28 PM IST

சென்னையில் ஆகஸ்ட் 2024ல் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு நிதியுதவி செய்ய தமிழக தொழில் நிறுவனங்களுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஒரு விஷயம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுப் பொருளாகி இருக்கிறது. சென்னையில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது. அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.


ஆனால் இந்த ஒரு விஷயத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. கார்பந்தயத்தை சென்னை நகருக்குள் நடத்த தடை விதிக்க வேண்டும், மேலும் தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் இருப்பதன் காரணமாக அவர்கள் இரவு நேரங்களில் பாதிக்கப்படலாம். எனவே கார் பந்தயத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுநல நோக்கில் வழக்கு தொடரப்பட்டது. அது மட்டும் கிடையாது அந்த மனுவில் மேலும் கூறும்போது, இந்த ஒரு கார் பந்தயத்தின் மூலமாக தமிழக அரசுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. குறிப்பாக 40 கோடி ரூபாய் செலவு தான் தமிழக அரசுக்கு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக விளையாட்டுத்துறை இந்த ஒரு விஷயத்தை கிடப்பில் போட்டது. தற்பொழுது மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வரவிருக்கும் ஃபார்முலா 4 நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தீவுத்திடல் பிளாக் ஸ்டாப் சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பந்தயத்தில் ஈடுபட்டுள்ள தொழில்துறை ஸ்பான்சர்களை நிர்ப்பந்திப்பதாக திமுகவை விமர்சனம் செய்து இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து கூறும் போது, " இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் எழுதித் தந்துவிட்டு, கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு ஃபார்முலா கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்துவதற்காக 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், விளையாட்டுத்துறை அனைத்து தொழிற்சாலைகளுக்கும், கார் பந்தயம் நடத்துவதற்குத் தேவையான நிதியினை பந்தய சாலை அபிவிருத்திக்காகவோ, உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவோ, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விளம்பரம் மூலமாகவோ ஸ்பான்சர் வழங்க கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடியா திமுக அரசின் இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் விடியா திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ள நிலையில், விடியா திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று அவர் மேலும் கூறினார்.

Input & Image courtesy: The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News