"எனக்கு குடும்பம் இருக்குங்க" - தி.மு.க'வினருக்கு பயந்து குத்தாலத்தில் 60 நாள் விடுப்பில் ஓடிய அரசு அதிகாரி !
By : Mohan Raj
ஆளுங்கட்சியாகிய தி.மு.க'வினரின் அழுத்தம் காரணமாக அரசு அலுவலர் ஒருவர் நீண்டகால விடுப்பில் சென்றிருப்பது மயிலாடுதுறை மாவட்டத்தை பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிவருபவர் சரவணன். இவர் ஆளுங்கட்சியான தி.மு.க'வினரின் அழுத்தம் காரணமாக 60 நாள்கள் ஈட்டா விடுப்பில் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கும் கடிதத்தில், "நான் குத்தாலம் வட்டாரத்தில் 1.03.2021 முதல் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிவருகிறேன். தற்போது, குத்தாலம் வட்டாரத்தில் ஆளுங்கட்சியினருக்கும் அலுவலகத்துக்கும் இணக்கம் இல்லாத சூழல் நிலவிவருகிறது. ஏனென்றால், அஜெண்டாவில் இல்லாத பொருள்களைத் தீர்மானத்தில் ஏற்றி டெண்டர் வைத்துத் தரச் சொல்கிறார்கள். சோலார் மின் விளக்குகளை ஒன்றியப் பொது நிதியிலிருந்து எடுக்கக் கூடாது, அதையும் தீர்மானத்தில் ஏற்றி டெண்டர் மூலம்தான் எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஒன்றியக்குழுத் தலைவர் 16 வேலைகளை எழுதிக் கொடுத்து, அதில் எட்டு வேலைகளைச் செய்துவிட்டதாக டெண்டர் வைக்கச் சொல்கிறார். நான் மறுத்தபோது, 'நான்தான் சேர்மன்' என்கிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிர்வாக அனுமதியை ஊராட்சியின் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். ஆனால், அதையும் தொடங்காமல் வைத்திருக்கின்றனர். அரசியல் கட்சியினருக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதால், என்னால் அலுவலகத்தில் சரிவர பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, இதற்குப் பின்னரும், நான் குத்தாலம் வட்டாரத்தில் பணிபுரிந்தால் இயற்கையாகவோ, செயற்கையாகவோ மரணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உள் மனதில் தோன்றுகிறது. என் மனைவி, 5 வயது குழந்தை, வயதான தாய் ஆகியோரைக் காப்பாற்றவேண்டியிருப்பதால், என்னுடைய உடல், மனநிலையைக் கருத்தில்கொண்டு 26.10.2021 முதல் 60 நாள்கள் சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சரவணன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆளும் தி.மு.க'வினர் அரசு நிர்வாகத்தில் தலையீடு அதிகமாகி அரசு அதிகாரிகளை மிரட்டுவது தொடர்வதால் அரசு அதிகாரியே 60 நாள் விடுப்பில் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.