தி.மு.க-வினரும் எனக்கு வாக்களிப்பார்கள் - பட்டென்று உடைத்த பா.ஜ.க மதுரை வேட்பாளர் Dr.சரவணன்!

By : Muruganandham
மதுரை வடக்கு தொகுதியில் பாஜக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து டாக்டர் சரவணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. தனக்கு ஆதரவு இருப்பதால் திமுகவினரும் வாக்களிப்பார்கள் என பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இரண்டு ஆண்டுகள் இருந்தேன். முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் இழிவுபடுத்திய நேரத்தில் எனக்கு வருத்தமாக இருந்தது. அப்போது நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமைக்கு அறிவுறுத்தினேன்.
தி.மு.க தலைமை இதனை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு தி.மு.க மேலிடதுக்கும் எனக்கும் இடையே சின்ன சின்ன நெருடல்கள் ஏற்பட்டது. அது தற்போது மனக்கசப்பாக வெடித்துள்ளது.
பா.ஜ.க-வில் இணைய திட்டமிட்டு நான் முன் கூட்டியே பேசி வந்ததாக, திமுக கட்சியை சேர்ந்த சில பொய் செய்தி பரப்பி வருகின்றனர். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தான் பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன்.
ஏற்கனவே நான் சிறப்பான சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெயர் வாங்கியுள்ளேன். என்னுடைய தொகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறேன். மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். இதனால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
பா.ஜ.க கட்சிக்குள் நுழைந்த பிறகும், எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாகவே பணிபுரிந்து வருகிறோம். திமுகவில் உள்ள இன்னும் பலர், விரைவில் பாஜகவில் இணையப்போகிறார்கள்.
நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அதிமுக தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தி.மு.க-வில் பலருக்கும் எனக்கு ஆதரவாக இருப்பதால், அவர்கள் எனக்கு தான் வாக்களிப்பாளர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரிய தோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சரவணன் பேசியுள்ளார்.
