Kathir News
Begin typing your search above and press return to search.

'தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கையை விடியல் அரசு வெளியிட வேண்டும்' : EPS வலியுறுத்தல்!

தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கையை விடியல் அரசு வெளியிட வேண்டும் : EPS வலியுறுத்தல்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  17 July 2021 2:26 PM GMT

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த உடன் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக தி.மு.க அரசு கொங்கு மண்டலத்தில் இருக்கும் மக்களுக்கு மிகவும் குறைவான அளவில் தடுப்பூசி ஒதுக்குவதாகவும், மேலும் தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு அதிகமான தடுப்பூசி ஒதுக்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஸ்டாலின் பாரபட்சம் காட்டுவதாக கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் தமிழக மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது பற்றி தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பான அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி "தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன், உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கோவிட் தடுப்பு மருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு போடப்படும் என்றது. பிறகு, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும், அங்கு கோவிட் தடுப்பு மருந்து அதிகளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இதனால் தமிழக அரசு வெளிச்சந்தையில், தடுப்பு மருந்துகளை வாங்கி மக்களுக்கு அளிக்கும் என்று புதிய கதை ஒன்றை சொல்லியது. இப்படி தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என மக்கள் இடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்தததை தவிர வேறென்ன செய்தது இந்த தி.மு.க அரசு.


தமிழக அரசிடம் தடுப்பூசி குறித்து சரியான திட்டமிடல் இல்லை. தடுப்பூசி செலுத்தப்படும் என்ற செய்தி வந்த உடன், தடுப்பூசி மையங்களில் அதிகளவு மக்கள் விடியர்காலை முதல் கூடுகின்றனர். இதனால், தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது. தமிழக மக்களிடம், தடுப்பூசி எண்ணிக்கை குறித்த உண்மையை கூறாமல், மத்திய அரசின் மேல் சுலபமாக பழி சுமத்தி தி.மு.க அரசு தப்பித்து வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால், அவைகள் முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து, கோவிட் தடுப்பு மருந்து விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் அரசு ஈடுபட வேண்டும். இந்த அரசு மக்களுக்கு தடுப்பூசி வழங்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் என்னவென்று புரியவில்லை.


மத்திய அரசால், தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அதில் எத்தனை பேருக்கு போடப்பட்டது? இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடட்பட வேண்டும் என்பதையும் மற்றும் மத்திய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகளை, மாவட்டங்கள் வாரியாக எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியும் தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்." என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News