Kathir News
Begin typing your search above and press return to search.

10 நாட்களில் 15 கொலை, இதுதான் விடியல் ஆட்சியா? - ஸ்டாலினை கேள்வி கேட்கும் ஓ.பி.எஸ்!

10 நாட்களில் 15 கொலை, இதுதான் விடியல் ஆட்சியா? - ஸ்டாலினை கேள்வி கேட்கும் ஓ.பி.எஸ்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Sep 2021 1:55 AM GMT

"கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது" என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌, சட்டம்‌-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள்‌ ஒருபுறம்‌ எடுக்கப்பட்டு வந்தாலும்‌, கரோனா தொற்று நோய்‌ பாதிப்பு ஓரளவு கட்டுக்குள்‌ இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில்‌, கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

வாணியம்பாடியில்‌ மனிதநேய ஜனநாயகக்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசீம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை; தி.மு.க முன்னாள்‌ மாநிலங்களவை உறுப்பினரின்‌ பேரன்‌ வெட்டிக் கொலை; சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை; நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்துக் கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம்‌, தப்பூர்‌ கோவிந்தாங்கல்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த ரங்கநாதன்‌ கட்டையால்‌ தாக்கிக் கொலை; விழுப்புரம்‌ மாவட்டம்‌, காரணை கிராமத்தைச்‌ சேர்ந்த லட்சுமி படுகொலை; சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச்‌ சேர்ந்த பா.ஜ.க‌ பிரமுகர் முத்துபாண்டி வெட்டிக்‌ கொலை; திருவண்ணாமலை மாவட்டம்‌, வீரானந்தல்லை சேர்ந்த வெங்கடேசன்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சீலேப்பள்ளியைச்‌ சேர்ந்த விவசாயி வெங்கடப்பன்‌ அரிவாளால்‌ வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, குப்பங்குளத்தைச்‌ சேர்ந்த காந்திமதி வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராசு மர்ம மரணம்‌; தேவகோட்டை ஒன்றிய பா.ஜ.க பொதுச்‌ செயலாளர்‌ கதிரவன்‌ வெட்டிக்‌ கொலை என எண்ணற்ற கொலைகள்‌ வரிசையில்‌, நேற்று திண்டுக்கல்‌, இ.பி. காலனியைச்‌ சேர்ந்த நிர்மலா பட்டப்பகலில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூரச்‌ சம்பவங்களுக்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும்‌ அமைதியான சூழலை உருவாக்கிடும்‌ வகையில்‌, முதல்வர்‌ ஸ்டாலின் சட்டம்‌ - ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம்‌ செலுத்தி, சட்டம்‌- ஒழுங்கைச் சீரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்கவும்‌, கொலைக்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோரை சட்டத்தின் முன்‌ நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்‌ தரவும்‌ அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News