100 நாள் வேலை திட்டத்தில் நடந்த மிகப்பெரிய ஊழல்: கேள்விகளை தொடுத்த அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் போது, "விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். அங்கிருந்த தமிழக பாஜக அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா அவர்கள் இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது.? என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.