மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி 1000 பெண்களுக்கு ஒரே இடத்தில் வளைகாப்பு நடத்தி அசத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24ம் தேதி வருகிறது. அவரது பிறந்த நாளை அதிமுகவினர் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர். அதில் முதலாவது அன்னதானம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்குவது. மற்றும் மருத்துவ முகாம் நடத்துவது போன்றவைகளை செய்து வருவார்கள்.
இந்நிலையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆறுக்குட்டி. இவர் தலைமையில் கோவில்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் 1000 பெண்களுக்கு ஒரே இடத்தில் சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்தியுள்ளார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள் மற்றும் சீர்வரிசையுடன் நிலங்கு வைக்கப்பட்டு, ஆரத்தி எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் அறுசுவையான உணவுகள் பரிமாறப்பட்டது. 1000 கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தியதற்காக அனைத்து மக்களும் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வை பாராட்டி வருகின்றனர்.