13 தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது, ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி
By : Thangavelu
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் பேசும்போது, என்னை இன்னும் பழைய எடப்பாடி பழனிசாமி என்று நினைத்தீர்களா ஸ்டாலின் அவர்களே, நடக்காது என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதனிடையே இவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பழைய பழனிசாமி கொலை வழக்குளை எதிர்கொண்டார். தற்போது புதிய வழக்குகளை எதிர்கொள்ள உள்ளார் என்று கூறினார்.
இந்நிலையில், இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சேலம் எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமானால் தி.மு.க., ஆட்சியாக இருக்கலாம். ஆனால் சேலம் எப்போதும் அ.தி.மு.க.தான். பல்வேறு சோதனைகள் வந்தாலும் அதனை சாதனை படிக்கட்டுகளாக நாங்கள் மாற்றுவோம். கட்சியின் அலுவலகமான எம்.ஜி.ஆரின் சொத்தை சிலர் அபகரிக்க நினைக்கின்றனர். அ.தி.மு.க.வின் தொண்டர்கள் இருக்கின்ற வரையில் அதனை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
மேலும், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு எங்களை செயல்படாமல் பார்க்கிறார். ஆனால் ஸ்டாலினால் ஒரு அ.தி.மு.க.வின் தொண்டனை கூட தொட்டுக்பார்க்க முடியாது. தற்போது துரோகிகளும், தி.மு.க.வுடன் சேர்ந்துக்கொண்டு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். எங்களை அழிக்க நினைத்தால் அது நடக்காது. விரைவில காலச்சக்கரம் சுழன்று அ.தி.மு.க., ஆட்சியில் அமரும்.
மேலும், ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் அளித்த அவர், தற்போது தி.மு.க.வில் உள்ள 13 பேர் மீது வழக்கு உள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? தற்போது கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலையில் எதை வேண்டுமானாலும் பேசி கட்சியில் பொறுப்பு வகிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் நாங்கள் பேச ஆரம்பித்தால் தி.மு.க., தலைவர்கள் நாறிப்போய்விடுவார்கள். அ.தி.மு.க., தொண்டர்கள் உழைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஒன்றும் அன்னக்காவடிகள் கிடையாது. தி.மு.க.தான் மக்களை சுரண்டி வந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar