'2010-ல் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள்' - தி.மு.க-வை வெளுத்து வாங்கும் டி.டி.வி.தினகரன்!
By : Mohan Raj
"நீட் தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள்" என தி.மு.க-விற்கு வழி கூறியுள்ளார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே ரத்து செய்வோம் என பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து தி.மு.க ஆட்சியை பிடித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களை நெருங்கியும் இதனை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. இதனை பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர். இதனால் தி.மு.க செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
இந்நிலையில் தி.மு.க-விற்கு வழி கூறும் விதமாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டரில் ஒர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இதன் மூலம், 2010ஆம் ஆண்டு மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்த போது ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களின் 'டாக்டர்' கனவை சிதைக்கும் ' நீட்' தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.