25 ஆண்டுகள் சேப்பாக்கத்தை கந்தலாக்கிய கருணாநிதி, அன்பழகன்? படம் பிடித்து மாஸ் காட்டும் உதயநிதி!
By : Mohan Raj
புதிதாக அரசியலில் களம் காணும் இளம் ரத்தங்கள் கூறும் கூற்றுகளில் முக்கியமானவை இதுவரை இருந்தவர்கள் செய்ததை விட சிறப்பாக செய்ய இயலும் என்பதே. அல்லது, இதுவரை இவர்கள் யாரும் தங்கள் பணிகளை சரி வர செய்யவில்லை, ஆகையினால் நாங்கள் இனிமேல் நல்ல முறையில் மக்களுக்கு பணிகளை செய்து தருவோம் என்பதாகும்.
அந்த வகையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சில முக்கிய இளம் வேட்பாளர்கள் களம் கண்டார்கள். அதில் மிக முக்கியமானவர், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரனும், தற்போதைய தமிழக முதல்வரின் மகனுமான உதயநிதி. இவர் போட்டியிடும் முதல் தேர்தல் இதுவே, சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணியில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க-வின் கஸ்ஸாலியை விட 69,000 வாக்குகள் கூடுதலாக பெற்று, அதாவது அந்த தொகுதியின் மொத்த வாக்குகளில் 67.89% சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். தி.மு.க-வும் ஆட்சியை கைப்பற்றி அதன் தலைவர் ஸ்டாலின் முதல்வரானார்.
தற்பொழுது ஆட்சியில் அமர்ந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி அந்த தொகுதியில் பம்பரமாக சுற்றி தொகுதியின் அவல நிலையை படம் பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
சில குறிப்பிட்ட நிகழ்வுகளாக அவர் ஆய்வு செய்து தனது மக்கள் படும் அவஸ்தைகளை படம் பிடித்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் உதயநிதி குறிப்பிட்டுள்ளதாவது "சேப்பாக்கம் தொகுதி மக்கள் உட்கட்டமைப்பு, சாலை, கழிப்பிடம், கழிவு நீர் போன்ற அடிப்படை வசதிகள், மயானம், மீன் சந்தை போன்ற மக்கள் பயன்படுத்தும் இடங்கள் என அனைத்துமே சரிவர அரசால் நல்ல விதமாக மக்களுக்கு செய்து தர இயலவில்லை. மேலும், அவற்றின் அவல நிலையால் மக்கள் மிகுந்த அவஸ்த்தை படுகின்றனர்" என்பது போன்று பல இடங்களை பார்வையிட்டு அவற்றின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
மொத்தத்தில் அந்த தொகுதியில் எந்த ஒரு மக்கள் தேவையும் நிறைவேற்ற படவில்லை எனவும், அந்த தொகுதியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டது போலவும் இவரின் ஆய்வு காட்டுகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 1996 தேர்தல் முதல் இந்த தொகுதி தி.மு.க-வின் வசமே உள்ளது. 1996 மற்றும் 2001, 2006 ஆண்டுகளில் அந்த தொகுதியில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. இதுமட்டுமல்லாமல் 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் வெற்றி வாகை சூடி கருணாநிதி முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது, அப்போது கருணாநிதி தொகுதி மக்களுக்கு ஏதுவும் மக்களுக்கு செய்யவில்லையா? தொகுதி மக்களை சாக்கடையிலும், சரியான கழிப்பிட வசதி இல்லாமலும் தவிக்க விட்டாரா?
அதனை தொடர்ந்து அடுத்தாக வந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் தி.மு.க-வே வெற்றி வாகை சூடியது. அதன் எம்.எல்.ஏ-வாக மக்களால் அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக பத்து ஆண்டுகள் அன்பழகன் எதுவுமே தொகுதிக்கு செய்யவில்லையா? தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லையா? அல்லது தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லையா?
இப்படி 25 ஆண்டுகளாக தி.மு.க ஆண்ட கோட்டையாகிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் அவல நிலையைதான் உதயநிதி படம் பிடித்து மக்களுக்கு காட்டுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக தி.மு.க ஒரு தொகுதியை எப்படி கந்தலாக்கி அங்கு வாழும் மக்களை சாக்கடையில் புரள விட்டது என்பதை வெளிச்சத்திற்கு உதயநிதி கொண்டு வந்துள்ளார். இதற்காக உதயநிதியை பாராட்டி தான் ஆக வேண்டும்.