3 ஆண்டு பதவிக்காக மாங்கு மாங்குன்னு உழைக்க வேண்டுமா? தி.மு.க, அ.தி.முக செம டென்ஷன்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கெடு விதித்தித்துள்ளது.
இருந்தாலும் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க மற்றும் அதிமுக தலைமை ஆயத்தமாகவில்லை. ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள திமுக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தயக்கம் நிலவுவதாக தெரிகிறது.
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றனர்.
ஆனால் அதற்கு பிறகு புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் தொகுதி வரையறைப் பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது நீதிமன்ற உத்தரவால் நடத்திமுடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதிலும் சில சிக்கல் உள்ளது. ஏற்கெனவே 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. அதன் படி கணக்கில் கொண்டால் 3 ஆண்டுகள்தான் பதவியில் நீடிக்க முடியும்.
அப்படி 3 ஆண்டுகள்தான் பதவியில் இருக்கமுடியும் என்றால் சட்டப்பேரவையில், பதவிக் காலக் குறைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், இவையெல்லாம் நிர்வாக ரீதியான சிக்கல்கள் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
இப்போ தான் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதற்குள் வெறும் மூன்று வருட பதவிக்கு மீண்டும் மெனக்கெட வேண்டுமா என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றன அதிமுக மற்றும் திமுக கட்சியினர்.