30,000 கோடி எங்கே? திசை திருப்பும் வேலையில் இறங்கிய திமுக! அண்ணாமலை கேள்வி!
By : Sushmitha
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு திமுக அரசை நோக்கி சரமாரியான கேள்விகளை முன் வைத்தார். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை நோக்கி மேலும் பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள்.
தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும் மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார்.
அந்த 30,000 கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம். டிஎம்கே பைல்ஸ் வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம்.
முறைகேடாக கொள்ளையடித்த மக்கள் வரிப்பணத்தை முதலீடாக கொண்டுவருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை! 4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளில் 98 சதவீதம் முடித்துவிட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் சொன்ன போது, நீங்கள் சொன்னது எல்லாம் பொய், 42 சதவீதம் பணிகள் தான் முடிந்துள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை, திமுக அமைச்சர் கே என் நேரு சொன்னார்.
98 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட பணிகளுக்கு செலவிட்ட தொகை என்ன ஆனது என்று தான் நாங்கள் கேட்கிறோம். ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். நேற்று மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் புகாருக்கு சிறை தண்டனை பெற்று சிறை செல்லவுள்ளார். இது மட்டுமில்லாமல், திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து சிறை தண்டனை பெறும் நீங்கள் மக்கள் வரி பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள் என்றும் மேலும் பல கேள்விகளை எழுப்பிம் பதிவிட்டுள்ளார்.