34 வருடங்களுக்கு பிறகு மாநிலங்களவையில் 100 இடங்களைக் கடந்த முதல் கட்சி அந்தஸ்தை பெற்ற பா.ஜ.க
By : Mohan Raj
ராஜ்யசபாவில் பாஜக எண்ணிக்கை 100-ஐத் தொட்டது, 34 வருடங்களுக்கு பிறகு இந்த சாதனையை எட்டிய முதல் கட்சியாக பா.ஜ.க மாறியுள்ளது.
மாநிலங்களவைக்கான சமீபத்திய 5 மாநில தேர்தலுக்குப் பிறகு, மேல்சபையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முதல் முறையாக 100-ஐ தாண்டியுள்ளது. கடந்த வியாழன் (மார்ச் 31) அன்று தேர்தல் நடந்த 13 ராஜ்யசபா தொகுதிகளில் நான்கில் பா.ஜ.க'வும் மற்றும் அதன் கூட்டணி கட்சியும் வெற்றி பெற்றன. அஸ்ஸாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நான்கு ராஜ்யசபா இடங்களை அதன் கூட்டாளியான UPPL உடன் இணைந்து கட்சி வென்றது.
பா.ஜ.க'வின் பபித்ரா மார்கெரிடா மற்றும் UPPL இன் ருங்ரா நர்சரி ஆகியோர் அசாமில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர், அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக இருந்த மாநிலங்களவை எம்.பியுமான ரிபுன் போரா தோல்வியடைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
அதன் கூட்டணிக் கட்சியான என்.பி.எஃப் கைப்பற்றிய நாகாலாந்து தொகுதியிலும் பா.ஜ.க போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், திரிபுராவில் சி.பி.எம் இடத்தையும் பா.ஜ.க கைப்பற்றியது. வியாழன் அன்று நடைபெற்ற மேல்சபைக்கான தேர்தலில் மொத்தமாக, பா.ஜ.க மூன்று ராஜ்யசபா இடங்களையும், அதன் கூட்டணியான UPPL ஒரு இடத்தையும் வென்றது. முன்னதாக மாநிலங்களவையில் பா.ஜ.க 97 இடங்களைக் தன்வசம் வைத்திருந்த நிலையில் மேலும் மூன்று புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால், அக்கட்சி இப்போது மேல்சபையில் 100 இடங்களைக் கொண்ட கட்சியாக மாறியுள்ளது.
1988-க்குப் பிறகு மாநிலங்களவையில் 100 இடங்களைக் கடந்த முதல் கட்சியாக பா.ஜ.க இருக்கும் என்று கூறப்படுகிறது.