₹81,500 மதிப்பு 'மோட்டார்' சைக்கிளில் காவலர்கள் புடைசூழ மிதிவண்டி பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
By : SG Suryah
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 4-ஆம் தேதி மகாபலிபுரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஆவதற்கு முன்பு பல முறை சைக்கிளிங் செய்து இருந்தாலும், முதல்வர் ஆனதற்கு பிறகு முதன்முறையாக இப்பயணம் மேற்கொண்டதால் கவனம் ஈர்த்தது. மாஸ்க் அணியாமல் இப்பயணம் மேற்கொண்டு, தனது ரசிகர்களுடன் செல்பி புகைப்படங்கள் எடுத்ததால் அது சர்ச்சையானது.
முதல்வரின் சைக்கிள் பயணத்திற்காக காவல் துறை கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர், இரண்டு துணை கமிஷனர்கள், ஆறு உதவி கமிஷனர்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 51 சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200 உள்ளூர் ஆயுதப்படை சிறப்பு பிரிவு போலீசார் வழி நெடுகிலும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரரை நிறுத்தி இருந்தனர் என தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்த சைக்கிளின் மதிப்பு ₹81,500 என தெரிய வந்துள்ளது. சென்னை அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டெய்ஜோ' எனும் நிறுவனம் இவ்வகை சைக்கிளை தயாரிக்கிறதாம். 'பெடல்ஸ் சி2' என்ற வகை சைக்கிளையே முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ளார்.
7.0 ஏ.எச் 'லித்தியம் அயன் பேட்டரி' உடைய 250 வாட்ஸ் திறன் உடைய மோட்டார் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது. ஏழு 'கியர்கள்' உடைய இந்த சைக்கிளை பெடல் செய்தால் மட்டுமே இயக்க முடியும். சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பெடல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சைக்கிளின் முன்பக்க பொருத்தப்பட்டுள்ள 'ஷாக் அப்சர்வ்ஸ் ஹைடிராலிக்' முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'பெடல்ஸ்' செயலி வாயிலாக இந்த சைக்கிளை இயக்க முடியும். எல்.சி.டி திரை பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிளின் முன்புறம் பின்புறம் 25 எல்.யு.எக்ஸ். அளவு உடைய எல்.இ.டி. 'லைட்' பொருத்தப் பட்டுள்ளது எனவும் அந்த செய்தி குறிப்பு விவரிக்கிறது.