9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
By : Thangavelu

மொத்தம் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர். இதில், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் கண்டனர். மேலும், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குசு சுயேச்சையாக வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இதனிடையே 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் 74 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 12) செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்குள் ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் முடிவுகள் தெரியவரும்.
Source: Dailythanthi
Image Courtesy:The New Indian Express