பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை: ராமதாஸ் வலியுறுத்தல் !
பாலாற்றில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
By : Thangavelu
பாலாற்றில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ஆந்திராவிலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் பெய்து வரும் மழை காரணமாகப் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலைவனமாகக் காட்சியளித்த ஆற்றில் இப்போது பால் போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
பாலாற்றுத் தண்ணீரைக் கொண்டு அதையொட்டியுள்ள ஏராளமான ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. பாலாற்றில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. நிரம்பிய தடுப்பணைகள் சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் கூடுதல் நீர் பயன்பாடின்றிக் கடலில் வீணாகக் கலக்கிறது! விநாடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. ஒரு டிஎம்சி நீரைக் கொண்டு பல ஏரிகளை நிரப்பலாம். 12 டிஎம்சி நீரைக் கொண்டு சென்னைக்கு ஓராண்டுக்குக் குடிநீர் வழங்க முடியும். ஆனால், இந்த நீர் வீணாவது வருத்தமளிக்கிறது!
பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் எனச் சட்டப்பேரவையிலும், வெளியிலும் பாமக வலியுறுத்தி வருகிறது. பாலாற்றில் அறிவிக்கப்பட்ட 4 தடுப்பணைகள் இன்னும் கட்டப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் 5 கி.மீ.க்கு ஒன்று வீதம் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter