அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தது.. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தகவல்.!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
By : Thangavelu
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். அப்போது பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனிடையே நேற்று இரவு விழுப்புரத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம் முடிவடைந்து விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிந்தார். அப்போது மதுராந்தகத்தில் சாதாரண உணவகத்தில் அமைச்சர் மற்றும் பாஜக நிர்வாகிகள் இரவு உணவருந்தினர்.
இதன் பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து 10 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி அதிமுக எம்.பி., ரவீந்தரநாத் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்தனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. இதன் பின்னர் ஒரு மணிக்கு பேச்சு வார்த்தை முடிவுற்றது. பேச்சுவார்த்தை முடிவுற்றதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் முதல்வர், துணை முதல்வர், தேனி எம்.பி. தங்களது வீட்டுக்கு சென்றனர்.
அமித்ஷாவை வழியனுப்ப விமான நிலையம் வந்திருந்த பாஜக தலைவர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது தொகுதி பங்கீடு சுமூகமாக முடடிந்ததாகவும், விரைவில் அந்த விபரங்கள் அறிவிக்கப்படும் என கூறினார்.