Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வை கண்டித்து 9ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு!

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 9ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தி.மு.க.வை கண்டித்து 9ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 Dec 2021 4:00 AM GMT

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 9ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய பதவிகளுக்கு நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே திமுக அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்கவும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வருகின்ற 9ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல் வாய்ச் சவடால் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அலட்சியப் போக்கினை எதிர்த்துப் போராட கழகத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கிறது.


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைத்தால், அவற்றின் விலை குறைத்து மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அண்மையில் மத்திய அரசு தனது உற்பத்தி வரியை (கலால் வரி) குறைத்ததன் விளைவாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் ஓரளவுக்குக் குறைந்தன.

மத்திய அரசின் வரிக் குறைப்பைத் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மாநிலங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களும், தங்கள் அதிகார வரம்புக்குள் வரும் ''வாட்'' எனப்படும் மதிப்புக் கூட்டல் வரியைக் குறைத்தன. இதன் காரணமாக, அங்கெல்லாம் பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூட விலை குறைந்திருக்கிறது.


தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுகவோ, பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய் அளவுக்குக் குறைத்துவிட்டு கள்ள மொனம் காக்கிறது. மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் செய்திருப்பதைப் போல வரிக் குறைப்பை செய்து கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களில் உள்ளதைப் போல பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.


இது போன்று பல்வேறு வகையில் மக்கள் நலன் காக்க தவறி வரும் திமுக அரசைக் கண்டித்தும், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்களுக்குத் தீர்வுகான வலியுறுத்தியும், அதிமுக சார்பில் கழக அமைப்பு ரதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகின்ற 9.12.2021 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதில் அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News