Kathir News
Begin typing your search above and press return to search.

குட்கா வைத்திருப்பதாக மிரட்டி அ.தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேர்க்கும் செந்தில் பாலாஜி! - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கண்டனம்!

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்து கொண்ட மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தூண்டுதலின்பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை வைத்து, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர்.

குட்கா வைத்திருப்பதாக மிரட்டி அ.தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேர்க்கும் செந்தில் பாலாஜி! -  ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்  கண்டனம்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Nov 2021 9:33 AM GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில், அதிமுகவை சேர்ந்தவர்கள் 8 பேர், திமுகவைச் சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.


இந்நிலையில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று கரூர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கடந்த 21.10.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர்.


இந்நிலையில், தேர்தல் நாளான 22.10.2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுக வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலை தள்ளி வைத்துள்ளார். தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கேட்டபோது, காவல்துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.


அதன் பின்னர் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நட்தத வேண்டும் என்று அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மாண்புமிகு நீதியரசர்கள் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்து கொண்ட மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தூண்டுதலின்பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை வைத்து, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு 2வது வார்டு உறுப்பினர் அலமேலு மற்றும் அவரது கணவர் மீது குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறையினர் இரண்டு பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர். தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி அவர்கள் கடந்த 18.11.2021 அன்று திமுகவில் இணைந்து விட்டனர்.

அதே போன்று அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு 10வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேல் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று, நிறுவனத்தை சீல் வைப்பதற்காக மிரட்டியும், ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் மிரட்டலுக்குப் பயந்து 23.11.2021 அன்று நல்லமுத்து வடிவேல் அவர்களும் திமுகவில் சேர்ந்து விட்டனர்.

இதே போன்று கரூரில் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என அனைவரையும் திமுகவில் சேறுமாறு மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிட்டி வருகின்றனர்.

கரூரில் அதிமுகவினர் திமுகவில் சேரவில்லை என்றால் அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் கீழ் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு திமுகவினர், அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனர். நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திமுகவிற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், அரசியல் ரீதியாக அதிமுகவை சந்திக்க முடியாத திராணியற்ற திமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News